எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமையம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


நாடாளுமன்ற தேர்தல்


2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேசிய, மாநில கட்சிகள் முழு வீச்சில் களமிறங்கி வருகின்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்க முயற்சியாக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த ‛இந்தியா’ கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியை வீழ்த்த பல முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும் 13 தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி உள்ளிட்ட  28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். இது அரசியல் களத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


இறைச்சி சமைத்த ராகுல்காந்தி 


இப்படியான நிலையில், ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த  சில மணி நேரங்களுக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 4 ஆம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் இடையே   லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா  ஆகியோரோடு இறைச்சி சமைத்துள்ளார். 






வைரலாகும் வீடியோ:


அதில், “எனக்கு சமைக்கத் தெரியும், ஆனால் நான் மிகப்பெரிய நிபுணர் அல்ல. நான் ஐரோப்பாவில் பணிபுரியும் போது நான் சமைக்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் தனியாக இருந்ததால் அடிப்படையான உணவுகளை சமைக்க கற்றுக்கொண்டேன்” என ராகுல்காந்தி தெரிவித்தார்.


பதிலுக்கு ராகுல்காந்தி லாலு பிரசாத் யாதவிடம் நீங்கள் எப்போது சமைக்க கற்றுக்கொண்டீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, “நான் 6 அல்லது 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வேலை செய்யும் என் சகோதரர்களைச் சந்திக்க பாட்னாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களுக்கு சமைப்பது, விறகு சேகரிப்பது, பாத்திரங்களை கழுவுவது, மசாலா அரைப்பது என அனைத்தையும் அங்கு கற்றுக்கொண்டேன்” என லாலு பிரசாத் யாதவ் கூறினார். 


சமைத்த இறைச்சியை தங்கை பிரியங்கா காந்திக்கு எடுத்து செல்ல அவரும் ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.