கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு நகைக்கடைகளில் நடந்த திருட்டு வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக்கிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவாரில் உள்ள நீதிமன்றம் இந்த கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அமைச்சருடன், குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவருக்கும் நவம்பர் 11 அன்று கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அடுத்து, என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பிரமாணிக்கின் வழக்கறிஞர் துலால் கோஷ் இன்னும் வெளியிடவில்லை.
கடந்த 2009ம் ஆண்டு அலிபுர்தார் ரயில் நிலையம் மற்றும் பீர்பாரா அருகே உள்ள நகைக்கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த வழக்கு குறித்து அரசு வழக்கறிஞர் ஜஹர் மஜும்தார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சிறப்பு எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் இருந்து அலிபுர்துவார் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது" என்றார்.
வடக்கு வங்காளத்தில் வங்காளதேச எல்லைக்கு அருகில் உள்ள தின்ஹாடா நகரில் பிரமானிக் வசித்து வந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் பாஜகவில் இணைந்துள்ளார்.
முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்துள்ளார். ஆனால், கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். வழக்கு குறித்து அலிபுர்துார் காவல் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தாலும், அதை அரசியல் கட்சிகள் செயல்படுத்துவதாக தெரியவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள், குற்ற வழக்குகளில் சிக்கியவருக்கு வாய்ப்பு கொடுத்தாலும், குறிப்பாக, தென் மாநிலங்களில் இது அதிகமாக நடைபெறுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்களில் 65க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற 232 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 75 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
இந்த சூழ்நிலையில், தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.