குஜராத் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம், அடுத்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, 182 இடங்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


கடந்த 1995ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை ஈடுபட்டிருந்தாலும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக இருப்பதால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன.


இந்த முறை, ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கி இருப்பதால், அங்கு அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. இந்நிலையில், தங்களது வேட்பாளரை பாஜகவினர் கடத்தி சென்று தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி வேட்புமனுவை திரும்ப பெற வைத்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதற்கு பாஜக இன்னும் பதில் அளிக்கவில்லை.


ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா பாஜகவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் காவல்துறையினரால் தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர், யாருக்கும் தெரியாத இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கஞ்சன் ஜரிவாலாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது வீடு பூட்டி இருப்பதாகவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.


"ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் குஜராத் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை தேர்தல் அலுவலகத்தில் உட்கார வைத்து போலீசார் கட்டாயப்படுத்தி உள்ளார்.


 






இது ஜனநாயகத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் என்பதை நான் தேர்தல் ஆணையத்திடம் கூற விரும்புகிறேன்" என டெல்லி துணை முதலமைச்சரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.


ட்விட்டரில் தேர்தல் ஆணையத்திடம் டேக் செய்து புகார் அளித்த அவர், "ஒரு வேட்பாளர் கடத்தப்பட்டுள்ளார். துப்பாக்கி முனையில் வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்தனர். தேர்தல் கமிஷனுக்கு இதைவிட பெரிய அவசரநிலை என்னவாக இருக்க முடியும்? எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்" என பதிவிட்டுள்ளார்.


வேட்பாளர் இழுத்து செல்லப்பட்டு வேட்பு மனுவை திரும்ப பெற வைப்பதாகக் கூறும் வீடியோவை ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ராகவ் சட்டா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


"காவல்துறையும் பாஜக குண்டர்களும் சேர்ந்து - நமது சூரத் கிழக்கு வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, வேட்புமனுவை வாபஸ் பெறும்படி வற்புறுத்தியதை பாருங்கள், 'சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்' என்ற வார்த்தை நகைச்சுவையாகிவிட்டது" என பதிவிட்டுள்ளார்.