Bharat Mata Ki Jai : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று ஆட்சியை கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேற்கு, வடக்கு, மத்திய இந்தியாவை தவிர்த்து, இந்த முறை தென் இந்தியாவை டார்கெட் செய்து பாஜக வேலை செய்து வருகிறது.
கேரளாவை குறிவைக்கும் பாஜக:
அந்த வகையில், கேரளாவில் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளை கைப்பற்றிடும் நோக்கில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இச்சூழலில், சில வலதுசாரி அமைப்புகள் சேர்ந்து கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில், தனது உரையை நிறைவு செய்த அவர், 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷம் எழுப்பும்படி கூட்டத்தை நோக்கி மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் கூட்டத்தில் இருந்த சிலர் கோஷம் எழுப்பவில்லை. இதனால், மீனாட்சி லேகி கோபம் அடைந்தார்.
கருத்தரங்கில் கடுப்பான மத்திய இணை அமைச்சர்:
ஒரு கட்டத்தில், உச்சக்கட்ட கடுப்பான அவர், "பாரதம், என்னுடைய தாய் மட்டும் தானா? அல்லது உங்களுடைய தாயுமா? சொல்லுங்கள். சொல்லுங்கள். சந்தேகம் இருக்கா? சந்தேகமில்லையா? உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்றார். தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், கூட்டத்தில் இருந்த சிலர், 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கம் இடவில்லை.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவரை நோக்கி கேள்வி எழுப்பிய மீனாட்சி லேகி, "மஞ்சள் ஆடை அணிந்த பெண் எழுந்து நில்லுங்கள். பக்கத்தில் பார்க்க வேண்டாம். நான் உங்களிடம் இப்படித்தான் பேசப் போகிறேன். நான் உங்களிடம் ஒரு நேரடியான கேள்வியைக் கேட்கப் போகிறேன். பாரதம் உன் தாய் இல்லையா? ஏன் இந்த அணுகுமுறை? பாரத் மாதா கி ஜெய்" என்றார்.
எழுந்து நின்ற பிறகும், அந்த பெண் முழக்கம் எழுப்பவில்லை. இதையடுத்து, "நீங்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறேன்" என மீனாட்சி லேகி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "தேசத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர். இந்தியாவைப் பற்றி பேசுவது சங்கடமாக இருக்கும் ஒருவர், இளைஞர் மாநாட்டில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.