நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடே எதிர்ப்பார்க்கு தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தரப்பில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை பாஜக கையில் எடுத்துள்ளது. அதேபோல், 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருப்பதால் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. யார் பிரதமர் வேடாளராக அறிவிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டைம்ஸ் நவ்-இடிஜி ஆய்வுக் கணக்கெடுப்பின்படி, பிரதமர் பதவிக்கு 64% பேரின் முதன்மைத் தேர்வாக நரேந்திர மோடி இருக்கிறார். மேலும், 17% பேர் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கான முதன்மைத் தேர்வாகத் தேர்ந்தெடுத்தனர், இதை தவிர்த்து 19% பேர் 'வேறு சிலருக்கு' வாக்களித்துள்ளனர்.


பிரதமர் தகுதி இருப்பவர் என்று தாங்கள் நம்பும் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும்படி கேட்டபோது, ​​மொத்தம் 19% பேர் ராகுல் காந்தியை தேர்வு செய்தனர். அவர்களில் 15% பேர் மம்தா பானர்ஜியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 12% பேர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், 6% பேர் மு.க. ஸ்டாலினையும், 8% பேர் உத்தவ் தாக்கரேவையும் தேர்ந்தெடுத்துள்ளனர். கணக்கெடுப்பில் மொத்தம் 40% பேர் இவர்கள் யாரும் இல்லை என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துள்ளனர் என அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல் 2024 க்கான அதிகாரப்பூர்வ தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த மாத தொடக்கத்தில், டெல்லியின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மக்களவைத் தேர்தலுக்கான உத்தேச தேதி ஏப்ரல் 16 என தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பணிகளுக்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்காக இந்த தேதி அறிவிக்கப்பட்டதாக பின்னர் விளக்கமளிக்கப்பட்டது.


2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது.  ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி முடிவடைந்து, மே 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜன்நாயக கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றியது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 91 இடங்களை வென்றது, இதர கட்சிகள் 98 இடங்கள் கைப்பற்றியது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் தகுதி பெற்ற 900 மில்லியன் மக்களில் 67 சதவீதம் பேர் 542 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.