இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் போர் உலகளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. தாக்குதலை ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும் அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், போர் விதி மீறல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


இந்த விவகாரத்தில் நடுநிலையான போக்கையே இந்தியா எடுத்து வருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலை கண்டித்த அதே சமயத்தில், பாலஸ்தீனியர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.


ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததா இந்தியா?


இச்சூழலில், இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அமைச்சர் பெயரில் வெளியான பதிலால் சர்ச்சை வெடித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது போன்று ஆவணம் சமூக வலைதளத்தில் வைரலானது.


சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: "ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இந்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும், இஸ்ரேல் அரசால் ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்றும் காங்கிரஸ் எம்பி கும்பக்குடி சுதாகரன் கேள்வி எழுப்பினார்"


இப்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கிறோம் என மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி பதில் அளிப்பது போன்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அமைச்சர் பெயரில் வெளியான பதிலால் சர்ச்சை:


இந்த நிலையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தான் அப்படி ஒரு ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.


"உங்களுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி மற்றும் பதிலுடன் எந்தப் பேப்பரிலும் நான் கையெழுத்திடவில்லை" என எக்ஸ் வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


 






வெளியான போலி ஆவணம் குறித்து சந்தேகங்களை கிளப்பியுள்ள உத்தவ் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, "அளிக்கப்பட்ட பதில் தன்னுடையது இல்லை என மீனாட்சி லேகி மறுக்கிறார். இதுமாதிரியான பதிலை யார் தந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். இது ஒரு போலியான பதில் என்று அவர் கூறுகிறாரா? ஆம் என்றால் இது ஒரு தீவிரமான நாடாளுமன்ற விதி மீறல்" என கேள்வி எழுப்பியுள்ளார்.