உத்திரபிரதேசத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பெண் ஒருவர், தனது கணவ்ர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தனது கணவர் செய்த கொடுமையால் திருமண வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்றும் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்தியதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


திருமண பலாத்காரம்:


தனது கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும், இதன் விளைவாக அவரது அந்தரங்க உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம் கணவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.


ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐபிசி பிரிவு 377-ன் கீழ் தண்டிக்க முடியாது என மேலும் இந்த நாட்டில் திருமண பலாத்காரம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை என்றும் நீதிபதி ராம் மனோகர் நாராயண் தெரிவித்தார்.


குற்றமல்ல:


திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாக்கக் கோரும் மனுக்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனைவிக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் போது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு குற்றவியல் தண்டனை வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.


அலகாபாத் உயர்நீதிமன்றம், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டி திருமண உறவில் ‘ இயற்கைக்கு மாறான குற்றம்’ நடைபெற இடமில்லை என குறிப்பிட்டது. மேலும் இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமை நடந்ததாக எந்த மருத்துவ அறிக்கையும் கூறவில்லை என கூறி அந்த நபரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.