ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.  


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின், 'க்வாட்’ (Quad Summit) தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். 


பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அமெரிக்க சுற்றுப்பயணம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய  மூன்று நாடுகள் 'AUKUS' என்ற ராணுவக் கூட்டணியை உருவாக்கின. இந்தோ- பசிபிக் பகுதியில் தடையற்ற அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த கூட்டமைப்பு செயல்படும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.  


இந்தோ- பசிபிக் கட்டமைப்பின் முக்கிய பங்குதாரராக விளங்கும் இந்தியா, 'AUKUS' கூட்டணி தேவையற்றது என்று கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க பயணத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா தலைவர்கள் கலந்துகொள்ளும் 'க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 'AUKUS' ராணுவக் கூட்டமைப்பால்,க்வாட் அமைப்பின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்துள்ளது.  



வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு - நேட்டோ


இந்திய வெளியுறவுத் துறை செயலலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இதுகுறித்து கூறுகையில், " 'AUKUS' என்பது முழுக்க முழுக்க ராணுவக் கூட்டமைப்பாகும். ஆனால்,'க்வாட்',  ஒருங்கிணைந்த இந்திய-பசிபிக் பகுதியில் தடையற்ற போக்குவரத்தை வலியுறுத்திகிறது. மேலும்,  விநியோக சங்கிலியில் நெகிழ்வு, முக்கியமான தொழில்நுட்பங்கள், கடல் சார் பாதுகாப்பு மற்றும் பருவநிலை விஷயங்களில் நிலவும் சவால்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்கிறது" என்று தெரிவித்தார். 


 



க்வாட் - அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்   


முன்னதாக, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் நாட்டு கப்பல் கட்டும் நிறுவனத்திடம் 12 நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது என ஆஸ்திரேலியா அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அரசின் இந்த செயலுக்கு பிரான்ஸ் அரசு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. உச்சபட்ச நடவடிக்கையாக, பிரான்ஸுக்கான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய தூதரை அந்நாட்டு அரசு திரும்ப பெற்றது. 


அமெரிக்காவின் மதிப்புமிக்க கூட்டாளிகள் என்று கருதப்பட்ட ஐரோப்பாவுடனான ஒத்துழைப்பை, 'AUKUS' கூட்டமைப்பு மேலும் பலவீனமாக்கியுள்ளது. சமீப காலங்களாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்கும் கருவியாக கருதப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (நேட்டோ - NATO) பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கும் அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவு இதற்கு முக்கிய காரணமாகும். 




அண்மைக்காலமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி, அதன் காரணமாக சீன ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டிருக்கும் விரிவாக்க வேட்கை ஆகியவை அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சவாலாக அமைந்துள்ளன.இதன் காரணமாக, அமெரிக்கா  தனது பார்வையை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பக்கம் திருப்பி வருகிறது. இதில், ஐரோப்பியர்களின் பங்கு தற்போது வரையிலும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தற்போது, பிரான்ஸ் நாட்டுடன் எழுந்துள்ள மோதல் போக்கை அமெரிக்கா எவ்வாறு கையாளப்போகிறது என்பதில்தான் நாட்டோ அமைப்பின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.


'AUKUS' ராணுவக் கூட்டமைப்பை கடுமையாக எதிர்த்துவரும்  பிரான்ஸ் பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.  நேற்று, பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய - பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் இருதரப்பு நடவடிக்கைகளையும், இந்தப் பகுதியில் நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக இந்திய - பிரான்ஸ் கூட்டணி அளித்துவரும் முக்கியமான பங்களிப்பையும் தலைவர் இருவரும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. 






அமெரிக்கா - பிரான்ஸ் என்ற இருதரப்பு பிரச்சனையாக உருவாகுமா? அல்லது நேட்டோ அமைப்பை மேலும் பலவீனமாக்குமா? ... அமெரிக்காவுக்கு எதிராக நாட்டோ (ஐரோபியா ) மற்றும் இதர நாடுகளை ஒன்றிணைக்குமா?...  இந்தோ- பிசிபிக் பிராந்தியத்தில் 'AUKUS' கூட்டமைப்பு இந்தியாவை பலவீனப்படுத்துமா? பலப்படுத்துமா? போன்ற கேள்விகள் தற்போது முக்கியத்தும் பெறத் தொடங்கியுள்ளன.     


பனிப்போர் இல்லை:  முன்னதாக, ஐநா பொது அவையின் கூட்டத்தில் நேற்று பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  “அமெரிக்கா மீண்டும் ஒரு பனிப்போரை விரும்பவில்லை “ என்று தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், மனித உரிமைகள் ஆகிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுபட்டு பாடுபட வேண்டிய சூழல்கள் எழுந்திருப்பதாகவும் தெரிவித்தார். சீனாவின் பெயர் குறிப்பிடாமால் பேசிய அவர்,அனைத்து சவால்களுக்கும், பகிரப்பட்ட நடவடிக்கை தேவை. உள்ளார்ந்த கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், பகிரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.   


மேலும், வாசிக்க: 


PM Modi US Visit: மோடியின் அமெரிக்க திட்டம் இது தான்... என்னென்ன சந்திப்பு... யார் யாருடன் உரையாடல்!