குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று சந்தித்து பேசினார். செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்தும் மேம்பாடு தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த முக்கிய சந்திப்பு: அப்போது, டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி மையத்தையும், புதிய துறையையும் உருவாக்க வேண்டுமென்று குடியரசு துணைத் தலைவரிடம் மத்திய இணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் மாணவர்களுக்கு தமிழ் போன்ற பழமையான செம்மொழிகளைக் கற்பிக்கும் வகையில் பிற கல்லூரிகளிலும், துறைகளிலும் புதிய இருக்கைகளை உருவாக்க வேண்டுமென்றும் இணையமைச்சர் எல்.முருகன், குடியரசு துணைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
முகுந்தன், அருணாச்சலம், முத்துசாமி ஆகியோர் அடங்கிய டெல்லி தமிழ் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழுவும் மத்திய அமைச்சருடன் சென்றிருந்தது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: உலகின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். இதை பேசும் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் குடியேறி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழர்கள் செல்லும் இடமெல்லாம் தங்களின் கலாசாரத்தை உயர்த்தி பிடித்து வருகின்றனர்.
வரலாற்று ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளமை மிக்க மொழியாக கருதப்படும் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி பல முறை பேசியிருக்கிறார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய பிரதமர், "தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன். தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் விரும்புகிறேன்.
தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பற்று உள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய விவேகானந்தர் தமிழ்நாடுக்குத்தான் வந்தார். சென்னை வந்தபோது அவருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள பாறை மீது அமர்ந்து தியானம் செய்தபோதுதான் விவேகானந்தர் தனது வாழ்வின் நோக்கத்தை உணர்ந்தார்.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மிகவும் பிரசித்தி பெற்றது. மேற்குவங்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் விவேகானந்தர் தமிழ்நாடு வந்தபோது கதாநாயகனை போல அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் விவேகானந்தர் தாக்கம் அதிகமாக இருக்கிறது" என்றார்.