மேகதாது பிரச்னையை தீர்க்க தமிழ்நாட்டு மக்களும் கர்நாடக மக்களும் சகோதரர்கள் போல் வாழ வேண்டும் என்றும் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படவில்லை" மைசூர் பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசிய குமாரசாமி, "பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சமாதானப்படுத்துவோம். தமிழகத்திற்கு நாங்கள் எந்த அநீதியும் செய்யவில்லை. நாம் சகோதரர்களாக வாழ வேண்டும் என்பதை தமிழ்நாட்டு முதல்வரிடம் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த இந்திய கூட்டாட்சி அமைப்பில், கர்நாடக மக்கள் உங்கள் ஆதிக்கத்தால் எவ்வளவு காலம் பாதிக்கப்படுவார்கள்? மக்களவையில் குரல் எழுப்ப கர்நாடக மக்கள் எங்களுக்கு தேவையான ஆதரவு அளித்துள்ளனர்.
கர்நாடகாவுக்கு உரிய நீரின் பங்கைப் பெறவும், நீதியைப் பெறவும் பிரச்னைகளைத் தீர்க்க நேர்மையாக பாடுபடுவோம். நீர்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் உதவியை பெறுவேன். இணைந்து பாடுபடுவோம்.
விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம்: 2018 முதல் 2019ல் தமிழகத்திற்கு 600 டிஎம்சி தண்ணீர் சென்றுள்ளது. மேகதாது பிரச்னை 125 ஆண்டுகால பிரச்சனை, ஒரே இரவில் தீர்க்க முடியாது" என்றார்.
காவிரி விவகாரம், தமிழ்நாடு - கர்நாடக மாநிலகளுக்கிடையே மீண்டும் பிரச்னையைாக வெடித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, கர்நாடக அணைகளில் இருந்து 15 நாள்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கேட்டு முதலில் தண்ணீரை திறந்து விட்டாலும் பின்னர், தண்ணீர் தருவதை கர்நாடக நிறுத்தியது. பின்னர், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தண்ணீர் தரப்பட்டது. வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை, 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது.