பல்வேறு சவால்களை உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் என்பது உலக அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. எனவே, மாறி வரும் உலக ஒழுங்கின் காரணமாகவும் காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் என்பது நிலையான ஆற்றலை தேடிய பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது. ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்:
அதன் ஒருபகுதியாக, கடந்த ஜனவரி மாதம், 19 ஆயிரத்து 744 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவை உலகளாவிய மையமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில், பசுமை ஹைட்ரஜன்தான் எதிர்கால எரிபொருள் என பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், "இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்த மக்கள் விரும்ப மாட்டார்கள்.
"பசுமை ஹைட்ரஜன் வெற்றி பெறும்"
ஏனெனில், தேர்வு செய்வதற்கு பல எரிபொருள்கள் இருக்கும். உள்நாட்டில் தேவை இருக்கும்போதும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் போதும் பசுமை ஹைட்ரஜன் வெற்றி பெறும். கடந்த 2021 ஆம் ஆண்டில், செங்கோட்டையில் சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்துவது பற்றி பேசினார். பலர் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். செங்கோட்டையில் இருந்து பிரதமர் கூறும்போது, அதை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
பசுமை ஹைட்ரஜனை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது குறித்து ஹர்தீப் பூரியிடம் கேட்டதற்கு, விரகு மற்றும் நிலக்கரியிலிருந்து எல்பிஜி சிலிண்டர்களுக்கு நாட்டு மக்கள் மாறியதன் உதாரணத்தை எடுத்துக்கட்டாக கூறினார்.
"முன்பு எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவது கடினமாக இருந்தது. பெண்கள் உணவு சமைக்க நிலக்கரியைப் பயன்படுத்தினர். அது நச்சுத்தன்மை வாய்ந்தது. அங்கிருந்து நகர்ந்தோம். உஜ்ஜவாலா திட்டம் ஒன்பது கோடி காஸ் சிலிண்டர்களை வழங்கியது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கார்களைப் பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோலை உயிரி எரிபொருளுடன் கலப்பது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். 20 சதவிகித கலப்பு இருந்தால், வாகன பாகங்களில் அரிப்பு ஏற்படாது. பாகங்கள் சிறந்த செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று தொழில்நுட்ப ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், நீங்கள் 20 சதவீதத்திற்கு மேல் கலக்க முடியாது என்று என்னிடம் கூறப்பட்டது" என ஹர்தீப் பூரி தெரிவித்தார்.