கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியருக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார்.


தாய்மொழிக் கல்வி:


பின்பு நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திர பிரதான், ”தொடக்க கல்வியை தாய்மொழியில் கற்பது, படிக்க, எழுதுவது இன்றியமையாதது. ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியைக் கற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து தாய்மொழிகளும் இந்தியாவின் தேசிய மொழி, மற்ற மொழிகளை விட எந்த மொழியும் சிறந்ததல்ல. நமது நாடு பல மொழிகள் மற்றும் பல கலாச்சாரங்களைக் கொண்டிருந்தாலும், நமது ஜீவன் ஒன்றுதான்.


”புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்”


புதிய தேசிய கல்விக்கொள்கை என்பது வெறும் ஆவணம் அல்ல. இதுவரை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகளில் மட்டுமே புத்தகங்களை வெளியிட்டது. 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஒடியா, பெங்காலி மற்றும் அஸ்ஸாமி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படும். புதிய கல்விக் கொள்கையின் முதன்மை நோக்கம் அடிப்படைப் பாடநெறி தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே.


பல ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுவை மறுசீரமைக்க புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. புதிய உயர்கல்வி ஆணையம் இந்தியாவில் பல்வேறு தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டிருக்கும். புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரையில், புதிய யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்க மத்திய அரசு தயாராக உள்ளது. மொத்த மாணவர் சேர்க்கையில் மாணவிகள் 27% முன்னிலையில் உள்ளதாகவும், விரைவில் இது 50 சதவிகிதத்தை எட்டும்” எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.


தொழில்நுட்பம் வாழ்வின் புதிய இடையூறு:


தொடர்ந்து, “இந்தியாவின் கல்வியானது வேலைவாய்ப்பு, அதிகாரமளித்தல் மற்றும் அறிவொளி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்பத்தை வாழ்வின் புதிய இடையூறாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இணைய சேவை மற்றும் ஸ்மார்ட் போன்கள் அடிப்படைத் தேவைகள்,  ஆனால் நாம் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் போன்ற வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சேர்ந்து இருக்கிறோம். இந்த சூழலில் தான் மெட்ராஸ் ஐஐடி உள்நாட்டிலேயே 5ஜி தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது.  தடுப்பூசி செலுத்திக் கொண்ட உடனேயே அதற்கான சான்றிதழை இந்தியாவை போன்று எந்தவொரு நாட்டிலும் வழங்கப்படவில்லை எனவும், அத்தகைய திட்டங்களை இந்தியா முன்னெடுத்ததாகவும்”  என்றும் கூறினார்.


தமிழ் குறித்து பெருமிதம்:


தொடர்ந்து தமிழ்மொழி குறித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”தமிழ் நாகரிகத்தின் பழமையான மொழி மற்றும் தற்போதுள்ள மக்கள் பண்டைய மொழியின் ஒரு பகுதியாக இருப்பது அதிர்ஷ்டம். பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களை முன்னேற்றுவதில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விடவும் மிகவும் முன்னணியில் உள்ளது, நாட்டிலேயே அதிக பெண்கள் வேலை செய்யும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியா ஜனநாயகத்தின் தாய் ஆக இருக்க, தமிழ்நாடு அதன் மையமாக உள்ளது. இதுதொடர்பாக நடப்பாண்டில் நடைபெற உள்ள இந்தியாவின் ஜி20 மாநாட்டின் போது, ​​விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்” எனவும் கூறினார்.