6 லட்சம் ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்காக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் நிறவேறியுள்ளது. 6 லட்சத்து ஆயிரத்து 427 துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன. இவை அனைத்தும் 7.63  x 39 மி.மீ  தாக்குதல் திறன் கொண்டவை.


டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்கூ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுதவிர, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ல் கலாஷ்னிகோவ் சீரிஸ் சிறிய ஆயுதங்களின் உற்பத்தி தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, அந்த புதிய ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "ரஷ்யாவுடனான நல்லுறவில் பாதுகாப்பு ரீதியான இந்திய உறவு காலத்தை வென்றது. இதுவே இரு நாட்டின் நல்லுறவிம் மிகப் பெரிய தூண் என்றாலும் அது மிகையாகாது. கடந்த 20 ஆண்டுகளாக ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பின் நிமித்தமான இந்திய ரஷ்ய உள் நாட்டு ஆணையம் (India Russina Inter Governmental Commission on Militray Technical Coperation IRIGC- MTC) வலுவாக இருக்கிறது. இந்தியா, ரஷ்யா ராஜாங்க ரீதியான உறவு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. அதனால் நமது கூட்டணி இந்திய ரஷ்ய பிராந்தியத்தில் அமைதியையும் வளத்தையும் உறுதி செய்யும்" என்றார்.


இந்திய - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அதன் நிமித்தமாக நடைபெறும் திட்டங்கள் குறித்து சீராய்வு செய்யப்படும்.


இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று 21வது இந்திய ரஷ்ய ஆண்டு மாநாடு நிமித்தமாக சந்திக்கின்றனர். இதற்காக புடின் டெல்லி வந்துள்ளார். புடின் வருகையை ஒட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளின் சிறப்பம்சம்:


இந்திய ராணுவத்தில் தற்போது 7.62 மி.மீ துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலாக ஏ.கே. 203 துப்பாக்கிகள் தயாரிப்பின் முடிவை மத்திய அரசு கையில் எடுத்து அதற்கு ஒப்புதலும் வழங்கியுள்ளது. இது 7.63  x 39 மி.மீ  காலிபர் துப்பாக்கி. ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் இந்த வகை துப்பாகிகள் தயாரிக்கப்பட உள்ளன.


ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின் நவீன வடிவமாக அமைந்திருக்கும் இந்த ஏ.கே 203 ரக துப்பாக்கிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுத தளவாடங்களை தயாரிக்கும் மிக்கைல் கலாஷ்னிக்கோவ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ரஷ்யா - இந்தியா நாடுகளுக்கிடையேயான இதுதொடர்பான பேச்சுவார்த்தை இழுக்கடித்துக்கொண்டே வந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 




இந்த ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஷ்யா அதிபர் புதின், இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். இந்த ஏ.கே 203 துப்பாக்கிகள் நிமிடத்திற்கு 600 தோட்டாக்களை உழிழும் சக்தி வாய்ந்தவை. குறைவான எடை கொண்ட இந்த வகை துப்பாக்கிகள் துல்லியமாகவும் ஆழமாக பாயும் திறன் கொண்டவையாகவும் உள்ளன. காலநிலை மாற்றத்திலும் கச்சிதமாக இலக்கை நோக்கி பாயும் எனவும் எளிதில் பராமரிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.