போலியான அரசியலமைப்பு நகலை காண்பித்து அம்பேத்கரை அவமானப்படுத்திவிட்டதாகவும் சிறுபான்மை சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார்.


இந்தியா கூட்டணி ஆட்சியில் உள்ள ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக, அதாவது நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.


"சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு"


ஜார்க்கண்டை பொறுத்தவரையில், ஒரே கூட்டணியில் இணைந்து போட்டியிட இந்தியா கூட்டணி தயாராகிவிட்டது. இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பாஜக கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.


இந்த நிலையில், பாலமு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். "அரசியல் சட்டத்தின் நகலை ராகுல் காந்தி காட்டுகிறார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் அம்பலப்படுத்தப்பட்டார்.


அரைத்த மாவையே அரைக்கும் அமித் ஷா:


அவர் காட்டிய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை ஒருவர் வாங்கி பார்த்திருக்கிறார். அதில், நகலின் அட்டையில் மட்டும் இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்டிருந்தது. மற்றபடி, வேறு எதுவும் அதில் எழுதப்படவில்லை.


அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்க வேண்டாம். இது, நம்பிக்கை பற்றிய கேள்வி. அரசியல் சட்டத்தின் போலி நகலைக் காட்டி, அம்பேத்கரையும், அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள். காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.


ஓபிசி, பழங்குடியினர் மற்றும் தலித்துகளிடம் இருந்து இடஒதுக்கீட்டைப் பறிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். அதை, சிறுபான்மையினருக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் ஓபிசி ஒதுக்கீட்டிற்கு எதிரானது.


மகாராஷ்டிராவில் உலமாக்களின் (இஸ்லாமியர் பிரிவு) பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தபோது சிறுபான்மையினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வாக்குறுதி அளித்தது. பிரதமர் மோடியின் தலைமையில், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது" என்றார்.


காஷ்மீர் குறித்து பேசிய அவர், "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. உங்களின் நான்காம் தலைமுறையால் கூட 370வது பிரிவை திரும்ப கொண்டு வர முடியாது என்று ராகுல் காந்தியை எச்சரிக்கிறேன்" என்றார்.