குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் உள்ள சரங்பூர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா அனுமன் சிலையை திறந்து வைத்தார்.




அனுமதி ஜெயந்தி விழா இன்று (06.04.2023 ) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், குஜராத்தில் 54 அடி உயர அனுமன் சிலையை அமித் ஷா திறந்து வைத்து பின் வழிபாடு நடத்தினார். 


குஜராத் - சரங்பூர் கோயில்


குஜராத் மாநிலத்தில் உள்ள சரங்பூர் கோயில்  ’Crusher of Sorrow’ என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் பிரபலமான கோயிலாகும். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுடன் அனுமன் சிலையிலும் திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, உத்தரபிரதேசம், பாட்னா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். 


54 அடி உயர அனுமன் சிலை: 


அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்பாய் குணாவாத் (Nareshbhai Kunawat) என்பவர் இந்த அனுமன் சிலையை வடிவமைத்துள்ளார். 30 ஆயிரம் கிலோ எடை, 54 அடி உயரத்தில் அனுமன் சிலையை வடிவமைத்துள்ளார். பஞ்சதாது என்ற உலோகத்தினால் செய்யப்பட்ட அனுமன் சிலை எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும். அனுமன் ஜெயந்திக்காக கோயிலின் பிரகாரத்தில் அனுமன் சிலை வடிவமைப்பு பணிகள் நடைபெற்றன. நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர் எற்படும் காலங்களிலும் தாக்குப்பிடிக்கும் தன்மையுடன் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அஞ்சனை மைந்தன்:


அனுமன் வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கேசரி மைந்தன் ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூல நட்சத்திர நாளில் பிறந்த நாள் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


ஆஞ்சநேய ஜெயந்தியன்று கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வது வழிபடுவது வழக்கமாகும்.  அன்றைய தினத்தில் ஆஞ்சநேய கோயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஏராளமானோர் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர். 


வழிபடுவது எப்படி?


அனுமன் ஜெயந்தி அன்று காலையில் விளக்கேற்றி அனுமனை வழிபடலாம். ராமர்  அல்லது அனுமன் கோயிலுக்கு சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும், பொரி, அவல், கடலை, சர்க்கரை, வடை, வெண்ணெய், தேன், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகள் நைவேத்தியமாக அனுமனுக்கு படைக்கலாம். 


வீட்டில் அனுமன் திருவுருவப் படம் இருந்தால், அதனை சுத்தம் செய்து பொட்டு வைக்க வேண்டும். அனுமன் படம் இல்லாதவர்கள் ஒரு மனை பலகையில் கோலமிட்டு வீட்டில் ராமாயண புத்தகம் இருந்தால் வைக்கலாம். இதனை அடுத்து, பூஜை அறையில் காலையில் விளக்கேற்றி அனுமன் திருவுருவப் படத்திற்கு பொட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். அதனுடன் வடை, பழங்கள், பொங்கல் உள்ளிட்டவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். 


நினைத்தவைகள் கை கூட, அனுமன் பிறந்தநாளன்று விரதம் இருப்பது பல மகிமையை தரும் வல்லமை படைத்தது என்று நம்பப்படுகிறது. அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, ராம நாமம் சொல்லி அனுமனை வணங்க வேண்டும். அன்றைய தினம் உணவருந்தாமல், விரதம் இருக்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர், அனுமன் கோவிலுக்குச் சென்று அனுமனுக்கு துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலை கொடுத்து வழிபடலாம்.