சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.
சத்தீஸ்கர் அரசியல்:
2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இச்சூழலில், சத்தீஸ்கரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி, முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
"நக்சல்களிடம் இருந்து சத்தீஸ்கர் விடுவிக்கப்படும்"
இந்த நிலையில், காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். நக்சல்களுக்கு காங்கிரஸ் ஊக்கம் அளித்து வருவதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நக்சல்களிடம் இருந்து சத்தீஸ்கர் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜக்தல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனுப்பும் பணம் காங்கிரஸின் ஏடிஎம் மூலம் டெல்லிக்கு திருப்பி விடப்படும். பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மக்களை கேட்டு கொள்கிறேன். நக்சல்களின் அச்சுறுத்தல் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கர் மாற்றப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
சத்தீஸ்கர் மக்கள் மூன்று முறை தீபாவளியை கொண்டாடுவார்கள். பண்டிகை நாளன்று ஒருமுறையும் இரண்டாவதாக டிசம்பர் 3 ஆம் தேதி பாஜக ஆட்சிக்கு வரும் போதும், மூன்றாவதாக ஜனவரியில் ராமர் கோவில் கட்டப்படும் போதும் மக்கள் தீபாவளியை கொண்டாடுவார்கள். பகவான் ராமரின் (ராமரின் தாய்வழி தாத்தா பாட்டிகளின் இடம்) தாய் வீடாக சத்தீஸ்கர் உள்ளது.
"நக்சலிசத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ்"
மோடி அரசாங்கத்தின் 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் நலனுக்காக மோடி பல பணிகளை செய்துள்ளார். அவர்களின் ஜல் (நீர்), காடு, ஜமீன் (நிலம்) ஆகியவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பழங்குடியினருக்கு பாதுகாப்பு, மரியாதை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வழங்க மோடி அரசாங்கம் பாடுபட்டுள்ளது.
உங்கள் முன் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நக்சலிசத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ். மறுபுறம், நக்சலிசத்தை ஒழிக்கும் பாஜக. கோடிக்கணக்கான ரூபாய் ஊழலை டெல்லி தர்பாருக்கு அனுப்பிய காங்கிரஸ், கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கேஸ் சிலிண்டர், கழிவறை, குடிநீர், சுகாதார வசதி, தானியங்கள், வீடுகள் என அனைத்தையும் வழங்கி வரும் பாஜக" என்றார்.