நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான குடும்ப தகராறும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மற்றொரு கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.


கழுத்தை நெரித்து கொலை:


தெற்கு டெல்லியில் அமைந்துள்ளது அம்பேத்கர் நகர். இந்த நகரில் வசித்து வருபவர் வேத் பிரகாஷ். அவருக்கு வயது 52. இவரது மனைவி சுஷிலா. அவருக்கு வயது 50. இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், நேற்று காலையில் ஆகாஷூம், பிரகாஷூம் சுசிலாவை மருத்துவமனைக்கு பேச்சு, மூச்சற்ற நிலையில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஷிலா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதால் மருத்துவமனை ஊழியர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆகாஷ் மற்றும் பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் ஆகாஷ், “நாங்கள் அம்பேத்கர் நகரில் உள்ள மடங்கிரில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். என்னுடைய பெற்றோர்கள் தரைத்தளத்தில் வசித்து வருகின்றனர். நாங்கள் முதல் தளத்தில் வசிக்கிறோம். இன்று காலை 6 மணியளவில் எனது தந்தை எனக்கு போன் செய்தார். நான் சென்று பார்த்தபோது எனது அம்மாவை அவர் பாத்ரூமில் இருந்து இழுத்து வந்தார். நான் கேட்டதற்கு அவர் மயக்க நிலையில் இருப்பதாக கூறினார். நான் மீண்டும் மீண்டும் கேட்டபோது அவர் சண்டையில் எனது அம்மாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறினார்.” இவ்வாறு ஆகாஷ் போலீசிடம் தெரிவித்தார்.


நடந்தது என்ன?


இதன் பின்னரே, ஆகாஷ் தனது அம்மாவை காப்பாற்றிவிட மாட்டோமா? என்று மருத்துவமனைக்கு அவரது உடலை கொண்டு வந்துள்ளார். உடன் பிரகாஷூம் வந்துள்ளார். ஆனால், சுசிலா ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.


போலீசார் பிரகாஷூடம் நடத்திய விசாரணையில் அவரும் சுசிலாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். சுசிலா வேலை காரணமாக வெளியில் செல்வது தொடர்பாக பிரகாஷூற்கும், சுசிலாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றி பிரகாஷ் சுசிலாவின் துப்பட்டாவாலே சுசிலாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.


மனைவி வேலை காரணமாக வெளியில் செல்வது பிடிக்காத கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: IIT Student Death: ஐஐடியில் என்னதான் நடக்குது? தொடரும் மர்மம்.. சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவர்!


மேலும் படிக்க: Dutee Chand: 'எல்லாம் வீணாகிவிட்டது' : உச்சநீதிமன்ற தன்பாலின திருமண தீர்ப்பால் டூட்டி சந்த் அப்செட்