குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்றும், பாஜக தலைமையிலான அரசு அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”நாட்டின் குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மைக்கான உரிமை சிஏஏ சட்டம். அதில், நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம், சிஏஏ திரும்பப் பெறப்படாது.” என தெரிவித்தார். 


தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தை நீக்குவோம் என்று இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சொல்கின்றன என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, “ இந்திய கூட்டணிக்கு கூட தெரியும், அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்று. சிஏஏ கொண்டு வந்தது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு. அதை ரத்து செய்வது சாத்தியமில்லை. நாடு முழுவதும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதனால் அதை ரத்து செய்ய விரும்புவோருக்கு இடம் கிடைக்காது.” என்றார். 


சிஏஏ சட்டத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி புதிய வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமித் ஷா, “ எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. ஒன்று சொல்லி இன்னொன்றை செய்த வரலாறு அவர்களுக்கு உண்டு. ஆனால், பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் வரலாறு வேறு. பிரதமர் மோடியும், பாஜகவும் சொல்வது கல்லில் செதுக்கப்பட்டதை போன்று உத்தரவாதமானது. மோடி அதையேதான் செய்கிறார். சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக கோடிக்கணக்கான மக்களை அழைத்து வந்து இந்தியாவில் குடியமர்த்தப் போவதாகவும், இதனால் பல பிரச்சனைகள் உருவாகும் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.


எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு:


டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தன் ஊழல் அம்பலமானதில் இருந்தே, நிதானம் இழந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாது. இந்தியா மீது அவருக்கு இவ்வளவு அக்கறை இருந்தால் ஏன் வங்கதேச ஊடுருவல்காரர்களை பற்றி பேசவில்லை? ஏன் ரோஹிங்கியாக்களை எதிர்க்கவில்லை” என்றார். 


அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக சிஏஏ -வை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த அமித் ஷா, “ சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல்களில் கூட அரசியல் ஆதாயம் இருப்பதாக சொன்னார்கள். இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும்போது பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாதா..? ராகுல் காந்தி, மம்தா, மு.க.ஸ்டாலின் மற்றும் கெஜ்ரிவால் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பொய் அரசியலில் ஈடுபடுகின்றன.


2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் சிஏஏ கொண்டு வருவதற்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கும் கட்சி தனது உறுதிப்பாட்டை அப்பவே கூறியிருந்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அது தாமதமானது. இதையடுத்து நேரம், அரசியல் ஆதாயம், நஷ்டம் என்ற கேள்விக்கே இடமில்லை. இப்போது, ​​எதிர்க்கட்சிகள் இதன்மூலம் அரசியலைச் செய்து தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க விரும்புகின்றன. அவை தற்போது அம்பலமாகிவிட்டன. நான் அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புவது சிஏஏ என்பது சட்டமே” என்று தெரிவித்தார்.