பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக:
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக, பாஜக தலைவர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 6 முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் பல முக்கிய பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர் பாஜக தலைவர்கள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகால கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் தூசி தட்டி எழுப்பிய பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் திமுக மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.
தேர்தலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வர திட்டமிட்டிருந்தார். இன்றும் நாளையும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவிருந்தார். ஆனால், அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தை குறிவைக்கும் பாஜக:
திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. இவர்களை ஆதரித்து அமித் ஷா பரபரப்புரை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டும் அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
உடல்நலக்குறவு காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றும், நாளை மறுநாளும் அமித் ஷா கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Harsha Bhogle: அரசியல் பேசிய ஹர்ஷா போக்லே! தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ.க.வை விமர்சித்தாரா?