மகளிர் உதவி எண் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை 81.64 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயன் பெற்றுள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


மகளிர் உதவி எண் திட்டம் குறித்து மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், "கடந்த 2015ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மகளிர் உதவி எண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



மகளிர் உதவி எண் திட்டம்:


181 என்ற தொலைபேசி எண் மூலம் காவல்துறை, மருத்துவமனைகள், சட்ட சேவை மையங்கள் போன்றவற்றுக்காக உரிய முகமைகளுடன் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளலாம்.


பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்து பெண்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். 24x7x365 அவசரகால மற்றும் அவசரமற்ற காலங்களில் உதவிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது பெண்கள் நலத் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.


 






தற்போது, 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மகளிர் உதவி எண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. (மகளிர் உதவி எண் சேவையை மேற்கு வங்க அரசு செயல்படுத்தவில்லை) இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 31.10.2024 வரை 81.64 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உதவி பெற்றுள்ளனர்" என்றார்.


பெண்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு உதவிடும் வகையில் மகளிர் உதவி எண் திட்டம் தொடங்கப்பட்டது. ஏதேனும் பிரச்னை என்றால், எப்போது வேண்டுமானாலும் உதவி எண்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளலாம்.   


இதையும் படிக்க: Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?