திருமண உறவுக்கு வெளியே நடக்கும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமையும் வேறு வேறு ஆனவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குடும்ப வன்முறை உடல் ரீதியாக மட்டும் உளவியில் ரீதியாகவும் பெண்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படியிருக்க, சமீப காலமாக, திருமண உறவுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர் பேசுபொருளாகி வருகிறது.


மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வது குற்றமா? மனைவியின் அனுமதி இன்றி அவரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட வைப்பது தற்போதிருக்கும் சட்டத்தின் படி குற்றமாக கருதப்படவில்லை. ஆனால், மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் பட்சத்தில், அதை குற்றமாக கருதக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த நிலையில், திருமண உறவில் கட்டாயப்படுத்தி உடல் உறவு கொள்வதை குற்றமாக கருத வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. திருமணமான பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பாதுகாக்க சட்டத்தில் மாற்று வழிகள் ஏற்கனவே உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


திருமண அமைப்பில் நடக்கும் பாலியல் வன்கொடுமையை மற்ற பாலியல் வன்கொடுமைக்கு இணையான குற்றமாக கருதுவது கடுமையானதாகவும் அதீதமானதவும் இருக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 375 மற்றும் பிரிவு 376B மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 198B ஆகியவற்றில் தரப்படும் விலக்குகள் அரசியலமைப்பின்படி செல்லுமா என்பதை தீர்மானிக்க அனைத்து மாநிலங்களுடனும் உரிய ஆலோசனைக்குப் பிறகு, முழுமையான அணுகுமுறை எடுக்கப்பட வேண்டும் என பதில் மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


மத்திய அரசு அளித்த பரபர பதில்: "தற்போது எழுப்பப்பட்ட பிரச்னையை சட்ட பிரச்னையாக பார்ப்பதை விட சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை குற்றமாக்குவது ஆட்சியாளர்கள் (நாடாளுமன்றம்) வரம்பிற்குள் வருகிறது.


பெண்ணின் சம்மதம் திருமணத்தின் மூலம் மறுக்கப்படுவதில்லை. திருமண உறவுக்கு வெளியே நடக்கும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் திருமண உறவில் நடக்கும் அத்துமீறல்களும் வேறு வேறு ஆனவை.  திருமணத்திற்குள் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க, குற்றவியல் சட்ட விதிகள் உட்பட பல்வேறு தீர்வுகளை நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.


இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 354, 354A, 354B, 498A மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, இத்தகைய மீறல்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்கிறது" என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.