பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கையிருப்பில் உள்ள சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுக்கான துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று டெல்லியில் துறையின் மூத்த அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகார்கள் ஆகியோரை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது,
ஏறத்தாழ 50 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை விடுவிப்பதற்கு இந்தியா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப் பயன்பாட்டு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா முதலான நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் அதனைச் சமாளிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தங்கள் கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை விடுவிக்குமாறு கூறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகள் பொறுப்புடனும், சந்தையால் தீர்மானிக்கப்படுவதைத் தீர்க்கமாக நம்புவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளால் செயற்கையாகத் தட்டுப்பாடு உருவாக்கப்படுவதைப் பற்றி இந்தியா தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது; மேலும், அது பல்வேறு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது’ எனவும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதால், இந்தியாவும் அதனைப் பின்தொடர்வதன் மூலம் பல்வேறு நேர்மறையான விளைவுகள் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 3 அன்று, மத்திய அரசு ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய், 10 ரூபாய் என்ற அளவில் முறையே குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், சில வல்லுநர்கள் அரசின் இந்த நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்குப் பயன் அளிக்காது எனக் கூறியுள்ளனர். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் குறைக்காமல் இருந்தால் மேலும் சிக்கல்கள் தோன்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவசர காலக் கட்டங்களைச் சமாளிப்பதற்காக இந்தப் பெட்ரோல் கையிருப்புகளை அரசு கட்டி, பாதுகாத்து வருகிறது.
கடந்த வாரம், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, `இன்றைய சூழலைப் போன்ற தேவைகளுக்காக இந்தப் பெட்ரோல் கையிருப்புகள் நம்மிடம் வைக்கப்படுவதில்லை. இயற்கைப் பேரழிவு அல்லது பிற நிகழ்வுகளால் நம் நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டால் ஏற்படும் அவசர காலங்களில் மட்டுமே கையிருப்பைப் பயன்படுத்த முடியும்’ எனத் தெரிவித்திருந்தார்.
அடுத்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதையடுத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.