நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்.


பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 10 ஆண்டுகள் ஆகிறது. அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார். 






இந்நிலையில் அவர் ராமர் நிற சேலையை அணிந்து வந்துள்ளார். பொதுவாக நீல நிறத்தை அல்லது மயில் கழுத்தில் இருக்கும் நிறத்தை ராமர் நிறம் என சொல்வார்கள். ராமருக்கே உரிய நிறமாகவும் இது சொல்லப்படும். அண்மையில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. நாடே உற்று நோக்கிய இந்த நிகழ்வு ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. ராமர் கோயில் கட்டுமானம் மூலம் அடுத்த ஆட்சியும் பாஜக கைப்பற்றும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இப்படி பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதற்கு ராமர் நிற சேலையை அணிந்து வந்துள்ளார். ராமர் கோயில் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், ராமர் நிற சேலையை அணிந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் அணிந்துள்ள புடவை முழுவதும் தங்க நிறத்தில் இலைகள் பதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரிய டிசைன்கள் எதுவும் இல்லாமல் சிம்பிளாக புடவை அணிவது வழக்கம். இந்நிலையில் இன்று அவர் ராமர் நிற புடவையில் embroidery டிசைன் வைத்து புடவை அணிந்துள்ளார்.






இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். குடியரசு தலைவரும் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.