PMAY: தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு கடந்த 2015-16 முதல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை (PMAY) செயல்படுத்தி வருகிறது. தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. 


இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் பிற திட்டங்களுடன் இணைப்பதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் மற்ற அடிப்படை வசதிகளான வீட்டுக் கழிப்பறைகள், எல்பிஜி இணைப்பு, மின்சார இணைப்பு, குழாய் இணைப்பு போன்றவற்றை செய்து தரப்படுகிறது.


இந்த நிலையில், புதிதாக அமைந்துள்ள மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.


 






பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மேலும் 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட நிதி உதவி வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று கேபினட் அமைச்சர்களாக பதவியேற்ற 30 பேர் கலந்து கொண்டனர். பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் நேற்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.


இவர்களை தவிர கூட்டணி கட்சி தலைவர்களான எச். டி. குமாரசாமி, சிராக் பாஸ்வான், லாலன் சிங், ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.