இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அன்னிய தலையீடும்  தேவையற்றது என்று ஐநா பொதுச் சபை பொது விவாதத்தின் 76 ஆவது அமர்வில் இந்தியா தெரிவித்தது.

  


மிக உயர்ந்த ஐக்கிய நாடுகளின் அவையின் மாண்புகளை கெடுக்கும் பாகிஸ்தானின் பேச்சுக்கு பதிலளிக்கும் இந்தியாவின் உரிமையை செயல்படுத்துவதற்கு இந்த அவையை நான் மீண்டும் ஒருமுறை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று இந்திய முதன்மை செயலாளர்  சினேகா துபே தெரிவித்தார்.


முன்னதாக, இந்த அமர்வில் காணொளி மூலமாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "மனித உரிமை மீறல்களில்    உலக நாடுகளின் அணுகுமுறை சமமற்ற முறையில் உள்ளது. சில குறிப்பிட்ட கோணங்களில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது.  புவிசார் அரசியல் சூழல், வணிகம், பொருளாதார நலன்கள்  கருதி  மேற்கத்திய நாடுகள் தங்கள் நட்பு நாடுகளின் மனித உரிமைகள் மீறல்கள் கவனிக்கத் தவறுகின்றன,” என்று கூறினார்.


கும்பலாக அடித்துக் கொலை செய்தல், கும்பல் வன்முறை, வெறுப்புக் கொலை ஆகியவற்றின் மூலம்  200 மில்லியன் இஸ்லாமியர்கள் இடையே நிரந்தர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் இடையூறாக இருப்பாதாக கூறி ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அம்சத்தை  இந்தியா நீக்கியது. ஆனால், ஜம்மு- காஷ்மீர் மக்கள் மீது முறையான கடுமையான உரிமை மீறல்கள் இந்தியா ராணுவம் நடத்தி வருகின்றன. ஜம்மு- காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய,சையது அலி ஷா கிலானி குறித்தும் பிரதமார் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். 


இந்த மாத தொடகத்தில் உயிரிழந்த கிலானியின் உடலை,அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து குடும்பத்தாரின் அனுமதி பெறாமல் இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டு, ரகசிய இடத்தில் அடக்கம் செய்ததாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். இதுகுறித்த முறையான விசாரணையை  ஐநா பொதுச் சபை கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


இந்தியா எதிர்ப்பு: பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு, ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி  சினேகா துபே பதிலளித்தார்.  


ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த வளர்ச்சியிலும், அனைத்து சவால்களையும் ஒன்றிணைந்து தீர்ப்பதிலும் இந்தியா உறுதியுடன் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அன்னிய தலையீடும்  தேவையற்றது.  


 






இந்தியாவின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் ஐநா பொதுச்சபையை தவறாகப் பயன்படுத்தும் அதன் மாண்புகளுக்கு அவதூறு எற்படுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை முதன்மையானதாக வைத்துக் கொண்டு வெறுப்பை உமிழ்ந்து பேசும் பாகிஸ்தான், மனித உரிமைகளின் சாம்பியனாக தன்னை காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. ஜம்மு- காஷ்மீர், லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று குறிப்பிட்ட அவர், உடனடியாக தனது ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.