ஒடிசாவில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக கனமழை பெய்துவரும் நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்துவருகின்றனர். மேலும் மகாநதி ஆற்றிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்நேரத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற யானை துர்திஷ்டவசமாக அங்கேயே சிக்கித்தவித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் படகின் மூலம் யானையை மீட்பதற்கான ஆற்றினுள் சென்றனர். அப்போது இவர்களுடன் பத்திரிக்கையாளர் அரிந்தம் தாஸ் என்பவர் தனது குழுவுடன் சென்றார்.


இந்த மீட்புப்படை குழுவினர், ஆற்றின் சிக்கித்தவித்த யானையின் அருகே சென்றதும், தண்ணீரின் வேகத்தின் காரணமாக படகு கவிழ்ந்தது. ஒரு நிமிடத்திலேயே தண்ணீரில் மூழ்கிய அவர்களைப் பார்த்த ஆக்ரோஷமாக செயல்பட்டது. இதனையடுத்து வனத்துறையினரும் மற்றும் மீட்புக்குழுவினர் தண்ணீரில் மூழ்கியவர்களைப் பத்திரமாக மீட்டனர்.  ஆனால் எதிர்பாராதவிதமாக செய்தியாளர் அரிந்தம் தாஸ் உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்த விபத்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 






மேலும் ஆபரேசன் கஜாவின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததற்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரதிய ஜனதா தேசிய துணை தலைவர் பைஜயந்த் பாண்டா மற்றும் தேசிய பேரிடர் நிவாரணப் படை டிஜி சத்ய நாராயண் பிரதான் ஆகியோர் பத்திரிகையாளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தாஸின் மரணம் பத்திரிக்கைக்கு பெரும் இழப்பு என்று பட்நாயக் கூறிய அதே வேளையில், சவாலான சூழ்நிலைகளில் தனது துணிச்சலான செய்தி அறிக்கையுடன் பத்திரிகையாளர் தனது சொந்த அடையாளத்தை உருவாக்கியதாக மத்திய அமைச்சர் கூறினார்.


மேலும் தாஸ் பணிபுரிந்த நிறுவனத்தினர் தெரிவிக்கும் போது, மிகவும் சுறுசுறுப்பான பத்திரிக்கையார் எனவும், எப்போதும் துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வார். இதுவரை பல பேரிடர் காலத்தின் போது திறமையாகப் பணியாற்றியவர் என்றும் தற்போது செய்தி சேகரிக்கச்சென்ற போது உயிரிழந்த சம்பவம் எங்களுக்கு பேரிடியாக உள்ளது என கூறியுள்ளனர்.


மேலும் இந்த விபத்துக்குறித்து வனத்துறை அதிகாரி தெரிவிக்கையில், தண்ணீரினுள் செல்லும் போது லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களையெல்லாம் பயன்படுத்தியதாகவும், ஆனால் செய்தியாளர் கையில் செய்தி சேகரிப்பதற்கான பொருள்கள் அனைத்தும் இருந்தமையால் அவரால் தப்பிக்க முடியவில்லை என கூறினர்.





இந்த விபத்துக்குறித்து பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், புகழ்பெற்ற பாதுகாவலரும், வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான பிஸ்வாஜித் மொஹந்தி, வனத்துறை அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளார்.  மேலும் வனத்துறையின் மீட்ப்பணியில் ஏன் பத்திரிக்கையாளர் உடன் சென்றார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. அனைத்துச் சூழ்நிலைகளிலும், தைரியத்தோடு பணியாற்றும் இதுப்போன்ற செய்தியாளர்களின் உயிரிழப்பு பல்வேறு சூழலில்  நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நேரத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்