மது அருந்துவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் தனிப்பட்ட அளவில் மட்டும் இன்றி சமூக அளவிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. எனவே, மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி:


இதற்கிடையே, அஸ்ஸாம் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மது பழக்கம் அதிகம் உள்ள 300 காவல்துறை அதிகாரிகளுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, அதிக மது அருந்தும் காவல்துறை அதிகாரிகள் அல்லது பருமனான உடல் எடை கொண்ட காவல்துறை அதிகாரிகள் அடங்கிய பட்டியலை அசாம் காவல்துறை செய்துள்ளது.


முழுமையான ஆய்வுக்கு பிறகு, பணிபுரிவதற்கு தகுதியற்ற 650 அதிகாரிகளுக்கு விருப்ப விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என அசாம் காவல்துறை தலைவர் ஜி.பி.சிங் தெரிவித்துள்ளார்.


டார்கெட் செய்யப்பட்ட பருமனான உடல் எடை கொண்ட காவல்துறை அதிகாரிகள்:


இதுகுறித்து அவர் பேசுகையில், "எங்களிடம் ஏற்கனவே சுமார் 680 நபர்களின் பட்டியல் உள்ளது. இருப்பினும், சரியான காரணம் இன்றி எந்த பெயரும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய, நாங்கள் பட்டாலியன்கள் மற்றும் மாவட்டங்களில் குழுக்களை அமைத்துள்ளோம். அவை, துணை கமாண்டன்ட் அல்லது கூடுதல் எஸ்பி-ரேங்க் அதிகாரி தலைமையில் இயங்கும்.


இந்தக் குழுக்கள் தங்கள் அறிக்கைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SPக்கள்) அல்லது பட்டாலியன் கமாண்டன்ட்களிடம் அளிக்கும். உரிய கவனத்துடன் அவை காவல் தலைமையகத்தில் சமர்ப்பிப்பார்கள். பயிற்சி மற்றும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பிரிவுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்ட அதிகாரிகள் குழுவால் பட்டியல் மீண்டும் ஆய்வு செய்யப்படும். இந்தக் குழு இறுதியாக விருப்பு ஓய்வு வழங்கப்படும் பணியாளர்களின் பட்டியலைத் தயாரிக்கும்." என்றார்.


இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகள் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஓட்டுவதால் ஏற்படுகிறது. நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 72 சதவீத விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரால் ஏற்படுகிறது.


கடந்த 2019ஆம் ஆண்டில், எய்ம்ஸ் நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் சுமார் 5.7 கோடி பேர் மதுவுக்கு அடிமையாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அரசு ஆய்வின்படி இந்தியாவில் 10 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 14.6 சதவீதம் (16 கோடி பேர்) பேர் மது அருந்துகிறார்கள். சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் மதுபானம் அருந்துவோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


உலக சுகாதார அமைப்பின் 2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மதுபானம் அருந்துவதால் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2,60,000 பேர் உயிரிழக்கின்றனர். ஆய்வின்படி 25 வயதுக்கு உட்பட்ட இந்தியர்களில் 88 சதவீதத்துக்கு அதிகமானோர் வயது வரம்பை மீறி சட்டவிரோதமாக மதுபானங்களை வாங்குகிறார்கள்.


இந்தியாவில் குஜராத், பிஹார், மிசோராம், நாகாலாந்து, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் மது விற்பனைக்கு தடை உள்ளது.