15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் ஜனவரி - மார்ச் மாதங்களில் 9.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி மார்ச் மாதங்களில் இதே புள்ளியியல் 9.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 15 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புறப் பெண்களில் கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 10.6 என இருந்த நிலையில் தற்போது 11.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2020 அக்டோபர்-டிசம்பர் காலக்கட்டத்தில் இது 13.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதுவே ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பற்றாக்குறை 8.6 சதவிகிதம் என்கிற புள்ளியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களில் வேலை பங்கெடுப்பு விகிதம் நகர்ப்புறங்களில் 47.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 48.1 சதவிகிதமாக இருந்தது.
தொடரும் அதிர்ச்சி புள்ளிவிவரம்:
வேலை வாய்ப்பின்மை ஒரு பக்கம் இருக்க வேலையிழந்தோர் எண்ணிக்கையும் சற்றும் சளைத்ததாக இல்லை. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் அண்மையில் வெளியானது. இந்தியப் பொருளாதாக் கண்காணிப்பு மையமான (Centre for Monitoring Indian Economy) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜூலை மாதத்தில் 6.95% ஆக இருந்த வேலைவாய்ப்பினை ஆகஸ்ட் மாதத்தில் 8.32% ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதத்தில் 8.3% ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 9.78% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த மே, ஜூன் மாதங்களை ஒப்பிடும்போது இது சற்றே குறைவு. மே மாதத்தில் 14.73%, ஜூன் மாதத்தில் 10.07% என்ற விகிதத்தில் வேலைவாய்ப்பின்மை இருந்தது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மையைப் பொறுத்தவரையில், ஜூலை மாதத்தில் 6.34% சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 7.64% ஆக அதிகரித்துள்ளது. இது 1.3% அதிகமாகும்.
வேலைவாய்ப்பின்மை குறைந்தாலும் தொழிலாளர்கள் பங்களிப்பு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமான அளவு உயர்ந்தது. இந்தியா கடந்த சில நாட்களாகவே வேலைவாய்ப்பு ரீதியாக கடுமையான சூழலை சந்தித்து வந்தது. கொரோனா பெருந்தொற்று சூழல் அந்தச் சூழலை மேலும் கடினமாக்கியது. நாடு முழுவதும் ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இப்போதும் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் 1.5 கோடி பேர் விவசாயத் துறையில் வேலையிழந்தனர். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வேலையிழப்பு கிராமப்புறப் பகுதியில் அதிகமாக உள்ளது. பொருளாதார சரிவில் இருந்து தேசம் மீளும் வரை, விவசாயத் தொழிலில் உள்ள மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர்.