ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், சிவில் வழக்கு தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற ஆணைக்கு களங்கம் விளைவித்ததாகவும், அதிகாரியை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டு இருந்தது. 


முன்னதாக, கிரிக்கெட் சூதாட்டம் குறித்த அறிக்கை தொடர்பாக சம்பத்குமார் மீது தோனி ஏற்கனவே சிவில் வழக்கு பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






வழக்கு விவரம் :


முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கடந்த 2013-ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2016 மற்றும் 2017 ம் ஆண்டு ஐபிஎஸ் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 


இந்த சூதாட்ட வழக்கை விசாரணை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் சூதாட்டம் தொடர்பாக தனது அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எஸ். தோனி, தனது பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரிடம் ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு கடந்த 2014ம் ஆண்டு தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக தனியார் சேனலில் விவாத நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இதன் காரணமாக, விவாத நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி சேனல், சேனலின் எடிட்டர் மற்றும் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் இந்த வழக்கில் எதிர்தரப்பாளர்களாகவும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேலும், இது தொடர்பான ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை களங்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் கூறியுள்ளார். எனவே, அவர் மீது சிவில் அவதூறு வழக்கு பதிவு செய்ய அரசு வழக்கறிஞரிடம் தோனி சார்பில் அனுமதி கோரப்பட்டது.


இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர் தற்போது அனுமதி அளித்தநிலையில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக முன்னாள் கேப்டன் தோனி, சிவில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பிஎன் பிரகாஷ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் நேற்று விசாரிக்கப்படவில்லை. விரைவில் நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காரமன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.