சமீப காலமாக, இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயும் இந்திய, சீன நாடுகளுக்கு இடையேயும் மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் இந்தியாவின் உறவு பெரும் பின்னடைவை சந்தித்தது.
அண்டை நாடுகளுடன் பதற்ற நிலை:
இந்த நிலையில், இந்திய - பாகிஸ்தான், இந்திய - சீன நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள அதிகரித்த பதற்றம் அவர்களுக்கிடையே மோதல் உண்டாவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவல் அளித்துள்ளது.
குறிப்பாக, பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், பாகிஸ்தானிடம் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு இந்தியா ராணுவ ரீதியாக பதிலளிக்கும் வாய்ப்பு முன்தைய காலத்தை விட தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்:
ஆண்டுக்கு ஒரு முறை, உலக நாடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க உளவுத்துறை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்யும். அந்த வகையில், இந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்தியாவும் சீனாவும் இருதரப்பு எல்லை பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தங்கள் நாட்டின் எல்லை எதுவரை உள்ளது என்பதை தீர்த்துக் கொண்டாலும், பல 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2020ஆம் ஆண்டு, இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதி கொண்ட சம்பவத்தால் அவர்களின் உறவில் தொடர்ந்து அவநம்பிக்கை ஏற்படும்.
சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களின் ராணுவ வலிமையை அதிகரித்ததால் இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு இடையே ஆயுதமேந்திய மோதலின் அபாயத்தை உயர்த்தி இருக்கிறது. இது, அமெரிக்கர்களுக்கும் அமெரக்காவின் நலன்களுக்கும் நேரடியான அச்சுறுத்தலை தந்திருக்கலாம். எனவே, இந்த பிரச்னையில் அமெரிக்க தலையிடுவதற்கான கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு ஆபத்தா?
இந்திய சீன எல்லை பகுதியில் நடக்கும் தொடர்ச்சியான குறைந்த அளவிலான உரசல் போக்கு பெரும் சண்டைக்கு வழி வகுக்கும் என்பது முன்பு நடைபெற்ற மோதல் சம்பவங்களின் மூலம் தெரிய வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு, மே மாதம், கிழக்கு லடாக் பகுதியில் இந்திய, சீன நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்ததில் இருந்தே இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பின்னடைவை சந்தித்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவும் வரையில் சீனாவுடனான உறவு சாதாரணமாக இருக்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உறவு குறித்து அந்த அறிக்கையில், "இந்தியாவுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய குழுக்களை ஆதரிப்பதில் பாகிஸ்தானுக்கு நீண்ட வரலாறு உண்டு. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா கடந்த காலத்தை விட, பாகிஸ்தானிய அச்சுறுத்தல்களுக்கு ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு அதிகம்" எனத் தெரிவித்துள்ளது.