பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு வேலை பார்த்ததாகக் கூறி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஓட்டுநர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய தகவல்களை பாகிஸ்கான் நாட்டுடன் பகிர்ந்ததற்காக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் அவர் கைது செய்யப்பட்டார். 


பூனம் சர்மா என்ற போலி பெயர் கொண்ட பாகிஸ்தான் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பணத்திற்காக முக்கிய ஆவணங்களை அவர் வழங்கி இருக்கிறார். பொய்யான அடையாள அட்டையை காண்பித்து ஓட்டுநரை சிக்க வைத்துள்ளார். இது தொடர்பாக, காவல்துறை தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது.


பாகிஸ்தான் உளவாளி : 


கடந்த ஆகஸ்ட் மாதம்தான், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி 46 வயதான வேறொரு நபரை டெல்லியில் வைத்து ராஜஸ்தான் காவல்துறை கைது செய்தது. அந்த நபர் 2016 ஆம் ஆண்டுதான், இந்திய குடியுரிமை பெற்றி இருக்கிறார்.


பாகிஸ்தானில் பிறந்த பாக்சந்த் என்ற உளவாளி, 1998ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளார்.


 






46 வயதான அவர் 2016 இல் இந்திய குடியுரிமை பெற்று டெல்லியில் டாக்சி டிரைவராகவும் தொழிலாளியாகவும் பணியாற்றத் தொடங்கினார். பாகிஸ்தானில் உள்ள தனது உறவினர்கள் மூலம் பாக்சந்த் தனது கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். 


உளவாளிகள் : 


இதேபோல, உளவு பாா்த்த குற்றச்சாட்டில் இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து, இந்தியாவின் தூதரக நடவடிக்கை, சா்வதேச அழுத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு, அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


இந்த வழக்கு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. குல்பூஷன் ஜாதவ் சாா்பாக இந்திய வழக்குரைஞரைக் கொண்டு வாதாடும் வாய்ப்பை இந்தியா கோரியது. ஆனால், பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்தது. அதனை எதிா்த்து சா்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது.


இந்தியாவின் முறையீட்டை விசாரித்த சா்வதேச நீதிமன்றம், ‘ஜாதவ் சாா்பில் இந்திய வழக்குரைஞா் வாதாடும் வாய்ப்பை அளிக்குமாறும், தண்டனை மறுஆய்வுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துமாறும் பாகிஸ்தானை கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேட்டுக்கொண்டது.


குல்பூஷண் ஜாதவ் : 


அதனைத் தொடா்ந்து, குல்பூஷண் ஜாதவுக்கு தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கும் வகையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி, மறு ஆய்வு முறையீட்டின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் அளித்தது.


அதன்படி, குல்பூஷன் ஜாதவ் சாா்பில் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி அத்தா் மினல்லா தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமா்வை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் அமைத்தது. இந்த அமா்விலும், வழக்கில் வாதாட இந்திய வழக்குரைஞா் நியமிக்க இந்தியா சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.