ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் நகலை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. தவிர்க்க முடியாத பட்சத்தில் பொது மையங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்த பின் குறிப்பிட்ட கோப்பையை அழிப்பது அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது.


ஆதார்


இந்தியாவில் அனைவருக்குமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய உலக அளவில் மிகப்பெரிய அடையாள அட்டை அமைப்பாக ஆதார் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆதார் அட்டையை பலர் எதிர்த்து வந்தாலும், 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆதார் செல்லும் என்று அறிவித்தது. இது தனிப்பட்ட தகவல்களை கொண்டு இருக்கும், ஏமாற்ற முடியாத அடையாள அட்டை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


அதே சமயம் தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது. இந்த நிலையில் பல்வேறு சேவைகளை வழங்க ஆதார் கட்டாயம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது.



பயன்பாடு


வங்கிகளும் லோன் எடுப்பது தொடங்கி பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டைகளை அடையாளமாக கேட்டு வருகிறது. ஹோட்டல்களில் கூட அடையாளத்திற்கு ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. இந்த நிலையில்தான் எந்தவொரு நிறுவனங்களுக்கும் ஆதார் நகல்களை மக்கள் அளிக்க கூடாது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டைகளை பயன்படுத்துவது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.


பாதுகாப்பு


அதில், ஆதார் விவரங்களை மக்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதை எந்த நிறுவனங்களுக்கும் கொடுக்க கூடாது. ஆதார் விவரங்களை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் ஆதாரினை பதிவிறக்கம் செய்ய கூடாது. பொது இடங்களில், அதாவது கம்ப்யூட்டர் சென்டர் போன்ற இடங்களில் ஆதார் விவரங்களை தரவிறக்கம் செய்தால் அதை அங்கிருந்து டெலிட் செய்துவிட வேண்டும்.






ஆதார் கேட்கக்கூடாது


மாஸ்க்ட் ஆதார் எனப்படும் கடைசி 4 இலக்கங்கள் கொண்ட ஆதார் கார்டினை பயன்படுத்தவும். இதில் கடைசி 4 டிஜிட் மட்டுமே இருக்கும். அதனால் இதை பயன்படுத்த வேண்டும். UIDAI அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஆதாரை அடையாள அட்டையாக கேட்க முடியும். தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் ஆகியவை எக்காரணம் கொண்டு ஆதார் அட்டைகளை அடையாளத்திற்க கேட்க கூடாது.


திருப்பி கேள்வி கேளுங்கள்


ஆதார் சட்டம் 2016 படி இது விதிமீறல் ஆகும். அப்படியே ஆதார் அட்டைகளை வாங்கி இருந்தாலும், அதன் விவரங்களை வைத்திருக்க கூடாது. சேமித்து வைக்கப்பட்ட விவரங்களை உடனே அழித்துவிட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதையும் மீறி உங்களிடம் ஆதார் அட்டை விவரங்களை கேட்டால் அவர்களிடம் UIDAI அனுமதி சான்றிதழ் இருக்கிறதா என்று கேட்கலாம், அதற்கான உரிமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


விளக்கம்:


ஆனால் இதனிடையே தாங்கள் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனவும் அவ்வாறு தாங்கள் கூறவில்லை எனவும் உடாய் விளக்கம் அளித்துள்ளது.