மகாராஷ்டிர மாநிலத்துக்கான மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலத்தின் 48 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி இலக்காக வைத்துச் செயல்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த அமித் ஷா, அவரது சிவசேனா கட்சி தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் காலடியில் சரணடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்த்தது. 2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் அனைத்து 48 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் கூறினார்.


கோலாப்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தேசியவாதக் கட்சி காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் காலடியில் சரணடைந்து முதலமைச்சர் பதவியை தாக்கரே தக்க வைத்துக் கொண்டிருப்பதாக தாக்கரேவுக்கு எதிராகக் கடுமையாக சாடினார்.


ஷரத் பவாரின் காலடியில் பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனா சரணடைந்தது. தாக்கரே எங்களுடன் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுடன் போட்டியிட்டார். ஆனால் முடிவுகள் வெளியான பிறகு, அவர் பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டார் எனக் கூறினார்.


பாஜக தனது கொள்கைகளை ஒருபோதும் தியாகம் செய்யவில்லை என்றும் அவர் கூறினார், அவர் கூறுகையில் “நாங்கள் அதிகாரத்திற்கு பேராசை கொண்டவர்கள் அல்ல, எங்கள் கொள்கைகளை நாங்கள் தியாகம் செய்ததில்லை. கடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் போட்டி நடந்தது. ஆனால் தாக்கரேயிடம் வலுவான நிலைப்பாடு இல்லை. இதை நானும் பிரதமர் மோடியும் எங்கள் பேரணிகளின் போது வெளிப்படையாகச் சொன்னோம். இதற்கிடையேதான் அவர் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தார்" எனத் தெரிவித்தார். 


முன்னதாக, மராட்டிய மன்னர் சிவாஜிக்குப் பின்னர் கோயில் மறுசீரமைப்புப் பணிகளை முழு மூச்சாக செய்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


முகலாயர்கள் மற்றும் பிற வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் ஆட்சியின் போது அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டியது சத்ரபதி சிவாஜி மகாராஜ் எனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  மராட்டிய போர் மன்னருக்குப் பிறகு தொடர்ந்து கோயில் மறுசீரமைப்பு பணிகள் பிரதமர் நரேந்திர மோடியால்தான் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.


சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையானது சமூகத்தில் அட்டூழியங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதாகவும், அவரால் தொடங்கப்பட்ட ‘சுயராஜ்யம்’ (Swaraj)க்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.


மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு புனேவில் உள்ள நர்ஹே-அம்பேகானில் சிவாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தீம் பூங்காவான 'சிவ்ஸ்ருஷ்டி'யின் முதல் கட்டத்தை திறந்து வைத்து அமித் ஷா பேசினார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



21 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து உருவாகியிருக்கும் இந்தத் திட்டம், பத்ம விபூஷன் விருது பெற்ற ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரே என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, இந்திய பாகிஸ்தான் எல்லை அருகே சத்ரபதி சிவாஜிக்கு அரசு சாரா அமைப்பு ஒன்று சிலை வைக்க உள்ளது. அந்த அமைப்பின் பெயர் அம்ஹி புனேகர்.