சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார்.


கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.


சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம்?


ஏக்நாத் ஷிண்டேவுக்கு கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். பின்னர், பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை ஏக்நாத் ஷிண்டே கலைத்தார். இதை தொடர்ந்து, முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று கொண்டார்.


கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. 


தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் அவர் தலைமையிலான அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடியாது. மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே தொடர்வார்" என தீர்ப்பு அளித்தது.


இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டேவையும் அவரை ஆதரித்து வரும் 38 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்கரே தரப்பு, மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளித்திருந்தனர். சமீபத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு விடுத்த கோரிக்கையை மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் நிராகரித்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவே உண்மையான சிவசேனா என அங்கீகரித்தார். 


உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு:


இந்த நிலையில், சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சபாநாயகரின் முடிவுக்கு தடை வதிக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு ஏக்நாத் ஷிண்டே ஆதரவு ஏம்எல்ஏக்கள் செல்ல இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது. தவறானது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு பத்தாவது அட்டவணைக்கு நேர் எதிராக சபாநாயகர் முடிவு எடுத்துள்ளார்" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசியலமைப்பு சட்டப்பிரிவு பத்தாவது அட்டவணை, கட்சி தாவல் தடை சட்டம் தொடர்பானது. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி தாவுவதற்கு இந்த சட்டம் தடை விதிக்கிறது.