இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


கடும் பனிமூட்டத்தால் தாமதமான விமானம்:


இந்த நிலையில், நேற்று டெல்லியில் இருந்து கோவா செல்லவிருந்த விமானம் கடும் பனிமூட்டத்தால் பல மணி நேரம் தாமதமாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வந்த விமானியை சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கியுள்ளார். விமானியை பயணி தாக்கும் வீடியோவை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.


மஞ்சள் நிற ஹூடி அணிந்த நபர் திடீரென கடைசி வரிசையில் இருந்து ஓடி வருவதும் விமானத்தின் இணை விமான அனுப் குமாரை அவர் தாக்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. கடும் பனிமூட்டத்தால் விமானம் பல மணி நேரம் தாமதமானதை தொடர்ந்து, பணியில் இருந்த விமானக் குழுவினருக்கு பதிலாக ஷிப்ட்-க்கு புதிய விமானக் குழுவினர் வந்துள்ளனர்.


விமானியை தாக்கிய பயணி:


விமான பணி நேர வரம்பு விதிகளின்படி, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விமானிகள் பணியில் ஈடுபடக்கூடாது. அவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்பட வேண்டும். விமானிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், போதுமான ஓய்வு நேரத்தை கட்டாயமாக வழங்குவதையும், பணி சோர்வு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்த்து காண்பதையும் பணி நேர விதிகள் உறுதி செய்கின்றன. இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு உள்ளது.


 






நிலைமை இப்படியிருக்க, விமானம் தாமதமானதற்கு பயணி ஒருவர் விமானியை தாக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  சம்பவம் நடந்த உடனேயே, விமானத்தில் இருந்த அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.


இதைத்தொடர்ந்து, விமானி அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். விமான நிறுவனம் தற்போது வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 110 விமானங்கள் தாமதமாகியுள்ளது. 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.