சிவசேனா கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம்  ஒதுக்கியது. உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.


கட்சியின் பெரும்பாலான எம்.எல்,ஏ.க்களின் உதவியாலும், பாஜகவுடனான கூட்டணியாலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.


கட்சி சின்னம், பெயருக்கு போட்டா போட்டி:


கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.


தேர்தல் ஆணையம் மீது தொடர் விமர்சனங்களை மேற்கொண்டு வரும் உத்தவ் தாக்கரே தரப்பு தற்போது, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மும்பையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று ஒரு முக்கிய கூட்டத்திற்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார்.


உத்தவ் தாக்கரே அணியில் உள்ள எம்பி அனில் தேசாய், சட்ட நிபுணர்களை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதன் முடிவில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தரப்பு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.


உத்தவ் தாக்கரே வியூகம்:


அதேபோல, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க வைக்க உத்தவ் தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் 15 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவுடன் இதை இணைத்து விசாரிக்க உத்தவ் தரப்பு முயன்று வருகிறது. 


முன்னதாக, தேர்தல் ஆணையம் குறித்து விமர்சித்த உத்தவ் தாக்கரே, "பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம், இதுவரை செய்திராத செயலைச் செய்துள்ளது. ஆதரவாளர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டு கொள்கிறேன். அடுத்த தேர்தலுக்கு தயாராகுமாறும் வலியுறுத்துகிறேன். மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள். கட்சியின் சின்னம் திருடப்பட்டது. திருடனுக்கு பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.


சிவசேனா விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்ப்புக்காக காத்திருக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திய தாக்கரே அணியினர், தற்போது வெளியான முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.