கடந்த 1985ஆம் ஆண்டு, கோடாக் கேபிடல் மேனேஜ்மென்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு, தற்போது நாட்டின் முன்னணி வங்கியாக இருப்பது கோடாக் மகேந்திரா வங்கி. வங்கி சாரா நிதி நிறுவனமான கோடாக் மகேந்திரா பைனான்ஸ் லிமிடெட், கடந்த 2003ஆம் ஆண்டு வணிக வங்கியாக மாற்றப்பட்டது.


சாரா நிதி நிறுவனம் ஒன்று வணிக வங்கியாக மாற்றப்படுவது அதுவே முதல்முறை. கடந்த 2014ஆம் ஆண்டு, ஐஎன்ஜி வைஸ்யா வங்கி, கோடாக் மகேந்திரா வங்கியுடன் இணைக்கப்பட்டது.


கோடாக் மகேந்திரா வங்கியில் அதிரடி மாற்றம்:


இந்த நிலையில், கோடாக் மகேந்திரா வங்கியின் நிர்வாகத்தின் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான வங்கியாளர் உதய் கோடக், தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரான பிரகாஷ் ஆப்தேவுக்கு உதய் கோடக் எழுதியுள்ள கடிதத்தில், "எனக்கு இன்னும் பதவிக்காலம் இருந்தாலும் நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன். நான் சில காலமாக இந்த முடிவைப் பற்றி யோசித்து வருகிறேன். இது சரியான விஷயம் என்று நம்புகிறேன்.


கோடாக் மகேந்திரா வங்கியை அடுத்து நிர்வாகிக்கபோவது யார் என்பதே எனது மனதில் முதன்மையானதாக இருந்து வருகிறது. ஏனெனில், நிறுவனத்தின் தலைவர், நான் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் ஆகிய அனைவரும் ஆண்டு இறுதிக்குள் பதவி விலக வேண்டும். இந்த அதிகார மாற்றம் மூலம் சுமூகமான மாற்றத்தை உறுதிசெய்ய நான் ஆர்வமாக உள்ளேன். அதை நானே தொடங்கி வைக்கிறேன்.  தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகுகிறேன்.


அடுத்த தலைமை செயல் அதிகாரி யார்?


நிறுவனராக, நான் கோடாக் பிராண்டுடன் ஆழமான உறவை கொண்டுள்ளேன். மேலும், நிறுவனத்திற்கு நிர்வாகம் பதவி வகிக்காத இயக்குநராகவும் குறிப்பிடத்தக்க பங்குதாரராகவும் தொடர்ந்து சேவை செய்வேன். பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்ல எங்களிடம் ஒரு சிறந்த நிர்வாக குழு உள்ளது. நிறுவனர்கள் விலகிச் செல்கிறார்கள். ஆனால், நிறுவனம் தொடர்ந்து வளர்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.


உதய் கோடாக்கை தொடர்ந்து, தற்போது, இணை நிர்வாக இயக்குநராக உள்ள தீபக் குப்தா, நிர்வாக இயக்குநராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 38 ஆண்டுகளாக, நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உதய் கோடாக் இருந்துள்ளார்.


கோடாக் குழுமகத்தின் கோடாக் கல்வி அறக்கட்டளை, இந்தியாவின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூக மக்களுடன் இணைந்து கல்வி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை வகுத்து அதன் மூலம் வறுமையைப் போக்க முயற்சித்து வருகிறது.