ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த தையல்காரர் ஒருவரின் தலையை வெட்டி கும்பல் ஒன்று கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, உதய்பூர், மால்தாஸ் தெருவில் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மால்தாஸ் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் நிகழாமல் இருக்க கடைகள் அடைக்கப்பட்டு, காவல் துறையினர் தயார்ப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தையல்காரரிடம் இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில், கொலையாளிகள் இருவரில் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 10 பேரின் தொலைபேசி எண்கள் அவரின் செல்போனில் இருந்துள்ளது. பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
குற்றம்சாட்டப்பட்ட முகமது ரியாஸ் அன்சாரி, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார். கொலை செய்வதற்கு முன்பு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வீடியோக்களை அவர்கள் இணையம் வழியாக பார்த்துள்ளனர் என காவல்துறை, சிறப்பு புலனாய்வு குழு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான தாவத்-இ-இஸ்லாமியுடன் ரியாஸ் அன்சாரி தொடர்பில் இருந்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவரான மற்றொருவர் நேபாளத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளார். சில பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். துபாலில் இருப்பவர்களுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக கண்ணையா லால் தனது கடையை திறக்கவில்லை. அவர் கடையை திறப்பதற்காக ரியாஸ் காத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.