ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக இருநாடுகளும் தெரிவித்தது. 


இந்த கோயிலை கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைத்தார். கோயில் திறக்கப்பட்டதில் இருந்தே ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்துக்கள், கோயிலில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், கோயிலில் எந்த விதமான ஆடையை அணிய வேண்டும் என்பது குறித்து கோயில் நிர்வாகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 


ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்து கோயிலில் கடும் கட்டுப்பாடுகள்:


அதன்படி, கழுத்து, முழங்கை, கணுக்கால் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட உடற்பகுதியை மறைக்கும்படி ஆடை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வாசகங்கள் பதிந்த தொப்பி, டி-ஷர்ட் உள்ளிட்டவற்றை அணிந்து கோயிலுக்கு வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டைட்டான ஆடைகளை அணிந்து கோயிலுக்கு செல்லக்கூடாது என்றும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கவனத்தை சிதறடிக்கும் வகையில் சத்தம் எழுப்பும் கருவிகளை கோயிலுக்கு எடுத்து செல்லக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.


கடந்த 1997ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலை கட்டுவதற்கான நிலத்தை வழங்குவதாக கடந்த 2015ம் ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, 2019ம் ஆண்டு கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


கோயிலின் சிறப்பம்சங்கள்:


32.92 மீட்டர் (108 அடி) உயரம், 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலம் கொண்ட இந்த கோயில், RSP Architects Planners & Engineers Private Limited மற்றும் Capital Engineering Consultants ஆகிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பண்டைய இந்து வேதங்களான ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில்  கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில், இந்த கோயிலில் ஏழு கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களின் கலைநயமிக்க வடிவமைப்பில் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் மற்றும் சிவபுராணத்தின் கதைகளை விவரிக்கப்படுகின்றன.


கோபுரங்கள் வெங்கடேஸ்வரா, சுவாமிநாராயண், ஜெகன்னாதர் மற்றும் ஐயப்பா போன்ற தெய்வங்களின் சித்தரிப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 'டோம் ஆஃப் ஹார்மனி' என்பது பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வான் ஆகிய பஞ்ச பூதங்களின் அம்சங்களை பிரதிபலிக்கிறது.