ஒரே நபர் இரண்டு பெண்களை, ஒரே சமயத்தில் காதலித்து, அவர்களை எப்படி எல்லம் சமாளிக்கிறார் என்பதை பல சினிமா படங்களில்  பார்த்து இருக்கிறோம். அதேபோல், தான் தற்போது கர்நாடகா மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளைஞர்.  இவர் தனது பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.


இவர்கள் இவரும் அவ்வப்போது வெளியே ஒன்றாக சுற்றித்திரிவது, சினிமா, ஷாப்பிங் என நீண்ட நாள்களாக  சுற்றித் திரிந்துள்ளனர். இந்நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பாக இதே இளைஞருக்கு வேறு ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணிடம் அறிமுகமாகினார்.  முதலில் நட்பாக பழகி வந்த இவர்கள், பின்னர் காதலில் விழுந்தனர். இரண்டு பெண்களை காதலித்து வந்த இவருக்கு யாரை கழற்றி விடுவது என்று தெரியாமல், இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் சமமாக காதலித்து வந்துள்ளார். 


 ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் ஒருவருக்கு தெரியாமல் மற்றவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் அவர்கள் வீட்டிற்கு தெரியவருகிறது. கத்திரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வர வேண்டும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதேபோன்ற சம்பவம் தான் நடைபெறுகிறது. ஆம்.... சந்தேகத்தின் பேரின் ஒரு பெண்ணின் தந்தை விசாரித்தபோது தான் இரண்டு பெண்களை அந்த இளைஞர் விரும்பும் விஷயம் தெரியவந்தது. 
 




இந்த விவகாரம் தெரிந்து இரண்டு பெண்களும், அந்த பையனை விட்டு விலகுவார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு. அந்த இரண்டு பெண்களும், அவன் எனக்கு தான் வேண்டும் என குடும்பிப் பிடி சண்டை போட்டனர். வேறு வழியின்றி இந்த விவகாரம் பஞ்சாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதை விட வினோதம்... ரூ. 1 மூலம் பூவா, தலையா என சுபயோக மங்கள தினத்தில் டாஸ் போட்டனர். அதான் கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் யார் பேட்டிங், யார் பீல்டிங் என தேர்வு செய்ய நடக்குமே டாஸ், அது போல. ஒரு பெண் பூ கேட்க, இன்னொரு பெண் தலை கேட்க, கடைசியில் பூ விழுந்த பெண்ணிற்கு அந்த பையன் என முடிவு செய்தனர். 


அதில் பூ விழுந்த பெண்ணிற்கு அந்த பையன் என முடிவானதுடன், எதிரே இருந்த மற்றொரு காதலி, கடுப்பில் காதலனை கன்னத்தில் அறைந்துவிட்டு சென்றார். பிறகு பெரியவர்கள் முன்னிலையில் ‛டாஸ் வென்ற’ பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண்களை டாஸ் போட்டு, மணமகன் முடிவு  செய்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.