கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து நாடு முழுவதும் நிபா பீதி தொற்றிக் கொண்டுள்ளது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவிவிடாமல் இருக்க கேரள எல்லையோர மாவட்டங்களில் தீவிர நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ளது.
கொரோனாவையே தாங்க முடியல… இதுல நிபா வேறயா? என மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஆனால், நிபா வைரஸ் கொரோனா வைரசை விட பல மடங்கு ஆபத்தானது. கடந்த முறை கேரளா, மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பாதித்தவர்களில் 90% பேர் உயிரிழந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சிக்குறிய தகவல்.
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நிபா வைரஸ் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு அடுத்தடுத்து பரவும் அபாயம் கொண்டது. இது சமூகத் தொற்றாக உருவெடுத்தால் ஏற்கனவே கொரோனாவால் சிக்கித் தவித்து வரும் கேரளா, பெரும் பாதிப்பை சந்திக்கும்.
இந்த நிலையில், நிபா வைரஸ் பரவலை தடுக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கி இருக்கின்றனர். இது குறித்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறை தலைவர் அசுதோஸ் பிஸ்வா கூறுகையில், “பழம் திண்ணும் வௌவால்கள் மூலமாகவே நிபா வைரஸ் பரவுகிறது. பழம் திண்ணி வௌவால்கள் குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் வசிப்பவை நிபா பாதித்த பழம் திண்ணி வௌவால் வேறு பகுதிக்கு செல்லும்போது, அத்துடன் நிபா வைரஸும் பரவலாம்.” என்கிறார்.
”நிபா வைரசுக்கு என தனியாக எந்த சிகிச்சையும் கிடையாது. இது மிகவும் அபாயகரமான நோய் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதனால் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள். அதிக உயிரிழப்புகளையும் இந்த நிபா வைரஸ் ஏற்படுத்தும்.” என பயமுறுத்துகிறார்.
“இந்த வைரசால் பாதிக்கப்பட்ட வௌவால்கள் மூலம் மனிதர்கள் மட்டுமின்றி பன்றிகள், மாடுகள், ஆடுகள், குதிரைகள் போன்ற மற்ற விலங்குகளுக்கும் பரவலாம். எனவே விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது.” என எச்சரிக்கிறார்.
நிபா குறித்து மருத்துவர் பிஸ்வாஸ் மேலும் கூறுகையில், “இது மனிதர்களுக்கு பரவத் தொடங்கிவிட்டால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கும், அவரிடம் இருந்து வேறு சிலருக்கும் பரவி சமூகப் பரவலாக உருமாறும். எனவே நிபா வைரஸ் பரவலுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். எங்கிருந்து நிபா பரவுகிறது என்று தெரிந்தால் மட்டுமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். நான் ஏற்கனவே சொன்னது போல் இது பழங்களை திண்ணும் வௌலால்களிடம் இருந்து பரவுகிறது.” என்கிறார்.
பழங்களில் பரவும்...!
”மரங்களில் இருந்து கீழே விழும் பழங்களை நீரில் நன்கு கழுவாமல் சாப்பிடுவதாலும் நிபா வைரஸ் தாக்கப்படலாம். காரணம் அந்த பழங்களின் மீது நிபா தாக்கிய பழம் திண்ணி வௌவால்கள் அமர்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதே போல், பாதி கடித்த நிலையில் கீழே விழும் பழங்களை சாப்பிடுவதன் மூலமாகவும் நிபா பரவும் ஆபத்து இருக்கிறது.” என எச்சரித்து உள்ளார்
உலக சுகாதார நிறுவனம், “பழம் திண்ணி வௌவால்களில் இருந்து பரவும் நிபா வைரஸ், மனிதர்களுக்கு ஆபத்தானது. மனிதர்களுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்தி, காய்ச்சல், உடல் வலி, தலைவலியை உண்டாக்கும்.” எனக் கூறப்பட்டு உள்ளது.