மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள வெறுப்புப் பிரசாரங்கள் காரணமாக, காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறைகளை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

கடந்த மே 1 அன்று, மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்படாவிட்டால், வரும் மே 4 முதல், தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படும் போது, அதனைவிட இரண்டு மடங்கு ஒலியுடன் ஹனுமான் சாலிசா ஒலிபரப்பப்படும் எனக் கூறியிருந்ததன் பின்னணியில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பேசியுள்ள மகாராஷ்ட்ரா மாநிலத்தின் காவல்துறை டிஜிபி ரஜ்னீஷ் சேத், மாநிலம் முழுவதும் மாநில ரிசர்வ் படையினரின் 87 பிரிவுகளும், சுமார் 30 ஆயிரம் காவலர்களும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள ஒட்டுமொத்த மகாராஷ்ட்ர காவல்துறையும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ராஜ் தாக்கரே

மேலும், அவர் மாநிலத்தின் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது காவல்துறையினரின் கடமை எனவும், சட்ட ஒழுங்கிற்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த மே 1 அன்று, ஔரங்காபாத் பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, `இன்று மகாராஷ்ட்ரா தினத்தின் முதல் நாள். நான் நான்காவது நாளில் இருந்து யார் உத்தரவையும் கேட்க மாட்டேன். எங்கெல்லாம் நாங்கள் ஒலிபெருக்கியைப் பார்க்கிறோமோ, அங்கெல்லாம் இரண்டு மடங்கு ஒலியுடன் ஹனுமான் சாலிசா கூறுவோம்’ எனக் கூறினார். 

மேலும் அவர், மராத்வாடா, விதர்பா முதலான பல்வேறு நகரங்களிலும் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ராஜ் தாக்கரேவின் வெறுப்புப் பேச்சு இணையத் தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஔரங்காபாத் மாவட்டக் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

உத்தவ் தாக்கரே

கடந்த மே 3 அன்று, மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டாம் எனக் காவல்துறையினரிடம் உத்தரவு அளித்துள்ளார். மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்சே பாடிலுடன் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு தொடர்பாகவும், சமீபத்திய சர்ச்சைக்குரிய சூழல் தொடர்பாகவும் சந்தித்து பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே இவ்வாறு தனது உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாநில டிஜிபி ரஜ்னீஷ் சேத்துடன் தொலைபேசியிலும் பேசியுள்ளார் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே. 

கடந்த ஏப்ரல் 12 அன்று, மகாராஷ்ட்ரா மகாநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே மே 3க்கு மாநிலம் முழுவதும் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதிக ஒலியில் ஹனுமான் சாலிசா ஒலிக்கப்படும் எனவும் கூறியதற்குப் பிறகு இந்த விவகாரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.