உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காஷிப்பூர் நகரத்தில் வாழும் 62 வயதான அனிதா, அவரது 57 வயது தங்கை சரோஜ் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தங்கள் தந்தையின் இறுதி ஆசையை இருவரும் நிறைவேற்றியுள்ளனர். தங்களிடம் இருந்த சுமார் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான 2.1 ஏக்கர் நிலத்தை, ஈத் பெருநாளுக்கு முன்பாக மசூதிக்குத் தானமாக அளித்துள்ளனர் இந்த சகோதரிகள். இதனால் நெகிழ்ச்சியடைந்த இஸ்லாமியர்கள் ஈத் தொழுகையின் போது, அவருக்காகப் பிரார்த்தனை செய்ததோடு, பலரும் தங்கள் வாட்ஸ் அப்பில் அவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு தனது 80 வயதில் உயிரிழந்த லாலா பிராஜ்நந்தன் ரஸ்தோகி விவசாயம் செய்து வந்தவர். மேலும், காஷிப்பூரில் அவர் சொந்தமாக வைத்திருந்த சில ஏக்கர் நிலங்கள் அவரது மறைவுக்குப் பின், அவரது மகள்கள் அனிதா, சரோஜ் ஆகியோருக்குச் சென்றன. சமீபத்தில் தங்கள் உறவினர்களுடனான உரையாடலின் போது, தங்கள் தந்தை லாலா தங்களிடம் இருந்த நிலத்தில் ஒரு பகுதியை `முஸ்லிம் சகோதரர்களுக்கு’ அளிக்க வேண்டும் என விரும்பியதாகவும், இதனைத் தன் மகள்களின் முன்னிலையில் கூறுவதற்குத் தயங்கியதாகவும் இரு சகோதரிகளும் தெரிந்து கொண்டனர்.
மீரட்டில் தனது குடும்பத்தினருடன் வாழும் சரோஜும், டெல்லியில் தனது குடும்பத்தினருடன் வாழும் அனிதாவும் இத்தொடர்பாக தங்கள் குடும்பங்களிடையே பேசிய பிறகு, கடந்த மே 1 அன்று காஷிப்பூருக்கு வந்ததோடு, அப்பகுதியில் வாழும் தங்கள் சகோதரர் ராகேஷ் உதவியோடு நிலத்தை ஒப்படைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள ராகேஷ், `என் தந்தை மத நல்லிணக்கத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர். தனது நிலத்தை ஈத்கா மசூதிக்கு வழங்குவதன் மூலம், ஈத் பெருநாள் போன்ற பண்டிகைகளில் இன்னும் கூடுதலாக மக்கள் தொழுகை மேற்கொள்வார்கள் என அவர் விரும்பினார். என் சகோதரிகள் அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஈத்கா மசூதி கமிட்டியின் தலைவரான ஹசீன் கான், லாலாவைப் `பெரிய மனதுக்காரர்’ எனப் பாராட்டியுள்ளார். `லாலா உயிருடன் இருந்தவரை, முக்கியமான நிகழ்வுகளின் போது, முதல் அன்பளிப்பை லாலாவிடன் இருந்தே பெறுவோம். பணம் அளித்தது மட்டுமின்றி, முஸ்லிம்களுக்கு அவர் பழங்கள், இனிப்புகள் முதலானவற்றையும் வாரி வழங்குவார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் இந்தப் பணிகளைச் செய்து வருகிறார். லாலாவும், என் தந்தை முகமது ரஸா கானும் சுமார் 50 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்றாலும், அவர்களது சகோதரத்துவம் எங்களுக்குப் பலவற்றைக் கற்றுத் தந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.
காஷிப்பூர் மத நல்லிணக்கத்திற்கான பகுதியாக இருப்பதாகவும் ஹசீன் கான் கூறியுள்ளார். ஈத்கா மசூதிக்கு அருகிலேயே குருத்வாராவும், ஹனுமான் கோவிலும் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், `இங்கு மத மோதல்கள் எதுவும் ஏற்பட்டதில்லை. ஈத் பெருநாளின் போது கூட, ஹனுமான் கோவிலின் அர்ச்சகர் சிறப்புத் தொழுகையின் நேரம் குறித்து கேட்டார். காலை 9 மணி என அவரிடம் கூறிய போது, காலையில் ஆர்த்திப் பூஜை இருப்பதாகவும், தொழுகையின் போது கோயிலின் ஒலிபெருக்கியை அணைத்து வைப்பதாகவும் தெரிவித்தார்’ எனவும் ஹசீன் கான் கூறியுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த நௌஷத் கான் என்பவர், `லாலா பிராஜ்நந்தனும், அவரது குடும்பத்தினரும் மேற்கொண்ட செயலுக்காக அவரை இங்கு வாழும் ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் பாராட்டியுள்ளது. மத ரீதியாக பிளவுப்படுத்தப்பட்டு நாம் வாழும் இந்தச் சூழலில், இந்தப் பெருந்தன்மையும், உண்மையான மதச்சார்பின்மையும் போற்றத்தக்கது. நம்முடன் இப்படியான மனிதர்கள் வாழ்ந்தால், நாடு சிறப்பாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.