மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே உலுக்கி வருகிறது. அங்கு, இனக்கலவரம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்தாலும் பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், மக்கள் மத்தியில் மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ ஏற்படுத்திய தாக்கம், அவரை வாய் திறந்து கண்டிக்க வைத்தது.
மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்:
இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில், மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பழங்குடி பெண்களை ஊர்வலமாக அழைத்து சென்ற இடத்தில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தில்தான் அந்த மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 21 மற்றும் 24 வயதுடைய பெண்கள், கொனுங் மாமாங் பகுதியில் உள்ள கார் ஷெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
கார் ஷெட்டில் இருந்த இரண்டு பெண்களையும், சில பெண்களுடன் சேர்ந்து வந்த ஒரு கும்பல், தாக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பணிபுரிந்து வந்த நபர், இதுகுறித்து கூறுகையில், "பழங்குடிகளை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும்படி கும்பலில் இருந்த பெண்கள், ஆண்களை தூண்டினர்.
சம்பவத்தன்று நடந்தது என்ன?
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். விளக்குகள் அணைக்கப்பட்டன. மேலும், அவர்கள் அலறுவதைத் தடுக்க துணிகளால் வாயை மூடினர். சுமார் ஒன்றரை மணி நேரம், பழங்குடி பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.
பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள ஆலைக்கு அருகில் வீசப்பட்டனர். அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தன. தலைமுடி வெட்டப்பட்டது. அவர்களின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன" என்றார்.
அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார், இதுகுறித்து புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயார், மே 16 ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அந்த புகாரில், "எனது மகளையும் மற்றொரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக சித்திரவதை செய்த் பின்னர் கொடூரமாக கொன்றனர். அவர்களின் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. மேலும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் இன்றுவரை தெரியவில்லை. இந்த குற்றத்தில் 100 முதல் 200 பேர் வரை ஈடுப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.