இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் இனம் அழிந்ததையடுத்து, நமீபியா நாட்டில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 17-ந் தேதி 5 ஆண் சிவிங்கிப்புலிகளும், 3 பெண் சிவிங்கிப்புலிகளும் தனி விமானம் மூலமாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிவிங்கிப்புலிகளை  மத்திய பிரேதசத்தில் உள்ள குனோ பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.


நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட இந்த சிவிங்கிப்புலிகள் புதிய இடத்திற்கு பழகுவதற்காக தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட சிவிங்கிப்புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட சிவிங்கிப்புலிகளில் இரண்டு புலிகள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டது. ப்ரெட்டி மற்றும் எல்டன் என்று பெயரிடப்பட்ட இந்த சிவிங்கிப்புலிகள் இரண்டும் விடுவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தங்களது முதல் வேட்டையை ஆடியுள்ளது.




இந்த இரண்டு சிவிங்கிப்புலிகளும் புள்ளி மானை வேட்டையாடியதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 50 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்ட சிவிங்கிப்புலிகள் சற்று சோர்வடைந்து காணப்பட்டிருக்கும் என்றும், இதனால் அதன் தசைகள் வலுவிழந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடுவிக்கப்பட்ட 24 மணி நேரத்திலே இவையிரண்டும் வேட்டையாடியது வனத்துறை அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகளில் தனிமைப்படுத்தலில் இருந்து முதலில் விடுவிக்கப்பட்டது இந்த இரண்டு சிவிங்கிப்புலிகள் மட்டுமே. மற்ற சிவிங்கிப்புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வரும் சூழலில், கர்ப்பமாக இருக்கும் ஆஷா என்ற சிவிங்கிப்புலி வரும் 10-ந் தேதிக்கு பிறகு விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்திய மண்ணில் 1952ம் ஆண்டே சிவிங்கிப்புலிகளின் இனம் அழிந்துவிட்டது. இதையடுத்து, இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலிகளின் இனத்தை உருவாக்கும் பொருட்டு நமீபியாவில் இருந்து மத்திய அரசு சிறப்பு முயற்சி எடுத்து ஆண் மற்றும் பெண் சிவிங்கிப்புலிகளை கொண்டு வந்தது. ஆண் சிவிங்கிப்புலிகளுக்கு 4.5 முதல் 5.5 வயதும், பெண் சிவிங்கிப்புலிகளுக்கு 2 முதல் 5 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவிங்கிப்புலிகள் நமீபியாவில் 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் வாழ்ந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது,


மேலும் படிக்க : 100 year Old Bridges: நாட்டில் 38 ஆயிரம் பாலங்கள், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை: இத எப்படி பராமரிக்கிறாங்க தெரியுமா?


மேலும் படிக்க : EWS: 10 சதவிகித இட ஒதுக்கீடு...சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி நீதிபதி ரவிந்திர பட் எதிர்ப்பு..! அதிரடி வாதங்கள்..