சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இரண்டு நாள்களில் இரண்டு விமானிகள் மர்ம மரணம்:


இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களில் இரண்டு விமானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விமானி விமான நிலையத்திலும் மற்றொரு விமானி விமானத்திலும் உயிரிழந்துள்ளார். இன்று நாக்பூரில் உள்ள போர்டிங் கேட்டில் இண்டிகோ கேப்டன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், கத்தார் ஏர்வேஸ் விமானிக்கு நேற்று விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டது.


இண்டிகோ கேப்டன், நாக்பூரிலிருந்து புனேவுக்கு விமானத்தை இயக்கவிருந்தார். போர்டிங் கேட் வரை சென்ற அவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நேற்று அவர் இரண்டு விமானங்களை இயக்கியுள்ளார். காலை 3 மணி முதல் 7 மணி வரை, புனே வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து நாக்பூர் வரை ஒரு விமானத்தை இயக்கியுள்ளார்.


27 மணி நேரம் ஓய்வில் இருந்த அவர் இன்று நான்கு விமானங்களை இயக்கவிருந்தார். மதியம் 1 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த இன்றைய முதல் பயணத்திற்காக அவர் சென்ற போது மயங்கி விழுந்தது சக விமானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


நடந்தது என்ன?


இதுகுறித்து இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், "இன்று அதிகாலை நாக்பூரில் எங்கள் விமானி ஒருவர் காலமானதை எண்ணி வருத்தப்படுகிறோம். நாக்பூர் விமான நிலையத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


உயிரிழந்த மற்றொரு விமானி, கத்தார் ஏர்வேஸ் விமானி ஆவார். நேற்று, டெல்லி-தோஹா விமானத்தின் பயணிகள் அறையில் கூடுதல் பணியாளராகப் பயணம் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் இதற்கு முன்பு ஸ்பைஸ்ஜெட், அலையன்ஸ் ஏர், சஹாரா ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.


இரண்டு விமானிகள் உயிரிழந்திருப்பதை விமான போக்குவரத்து இயக்குநரகம் உறுதி செய்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன்பு, மியாமியில் இருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் குளியலறையில் விமானி ஒருவர் சரிந்து விழுந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பனாமாவில், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. மயங்கி விழுந்த அந்த விமானியின் பெயர் கேப்டன் இவான் ஆண்டோர். விமானம் தரையிறங்கிய பிறகு, இவர் இறந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.