மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் (Information Technology (IntermediaryGuidelines and Digital Media Ethics Code) Rules 2021) தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. முன்னதாக, ட்விட்டர் நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், " எங்களுடைய இந்திய ஊழியர்கள் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் சேவை வழங்கி வரும் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் நினைத்து கவலை கொள்கிறோம் .
ட்விட்டர் நிறுவனத்தின் உலகளாவிய பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் மூலக் கூறுகளை அமல்படுத்தும் எங்கள் முயற்சிக்கு பதிலடியாக காவல்துறையை பயன்படுத்தி மிரட்டப்படும் உத்திகளால் கவலை கொண்டுள்ளோம்.
புதிய விதிமுறைகளில் உள்ள சில பகுதிகள், மக்களின் பங்கேற்புடன் கூடிய திறந்த, வெளிப்படையான, சுதந்திரமான பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய விதிமுறைகளில் சில மாற்றங்களை முன்வைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, இந்திய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான உரையாடலைத் தொடருவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், சிவில் சமூகம், தொழில்நிறுவனங்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி அடிப்படையிலான அணுகுமுறையே தீர்வுகளை ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் சட்டங்களை ட்விட்டர் பின்பற்ற வேண்டும் என்று டிவிட்டரின் அறிக்கைக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, தனது விதிமுறைகளை கூறும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. புதிய விதிமுறைகளை வேண்டுமென்றே எதிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் சட்ட அமைப்பை குறைவாக மதிப்பிட முயற்சிக்கிறது. மேலும், இந்தியாவில் எந்த குற்றத்துக்கும் பொறுப்பேற்பதிலிருந்து பாதுகாப்பை கோருவதன் அடிப்படையில், இடைக்கால வழிகாட்டுதல் ஒழுங்குமுறைகளை பின்பற்ற ட்விட்டர் மறுக்கிறது" என்று தெரிவித்தது.
மேலும், காவல்துறை விசாரணை தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த அமைச்சகம், " நடைபெறும் விசாரணை தொடர்பாக டெல்லி காவல்துறை, ஏற்கனவே விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ட்விட்டர் நிருவனம் எழுப்பிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அந்த அறிக்கை பதில் அளிக்கும் விதமாக அமைகிறது.
டிவிட்டரின் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. இது தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி. இந்த துரதிருஷ்டமான அறிக்கையை இந்திய அரசு கண்டிக்கிறது" என்று தெரிவித்தது.
புதிய விதிமுறைகள்: மத்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசாங்கம் கோரினால் அவற்றைத் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், அரசாங்கம் சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் தொடர்புடைய நிறுவனங்கள் அகற்ற வேண்டும். இவற்றைச் செய்வதற்கு பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒப்புக்கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது நிலை ஏற்படும்.