ட்விட்டர் அதன் பயனர் சரிபார்ப்பு செயல்முறையை மறுபரிசீலனை செய்யும் என அந்நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலோன் மஸ்க் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சமூக ஊடக தளங்களில் ஒன்றான ட்விட்டரை கையகப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
ட்விட்டரில் என்ன மாற்றலாம் என்பது பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்காமல் "முழு சரிபார்ப்பு செயல்முறை இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது" என்பதை மட்டும் எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.
இச்சூழலில், ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் ப்ளூ டிக்குக்காக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்துவது குறித்து அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
அதாவது, பயனர்கள் ப்ளூ டிக்கிற்காக மாதத்திற்கு 19.99 டாலர்கள் (ரூ.1600க்கு மேல்) செலுத்த வேண்டும். இல்லையேல், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் அவர்களின் "வெரிஃபைட்" பேட்ஜ்களை இழக்க நேரிடும்.
இந்த தகவலை மறுத்துள்ள மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "இது உண்மை என்று நான் நினைக்கவில்லை. இது ட்விட்டருக்கு சவாலாக உள்ளது. இந்த தவறான தகவல் எப்படி மேடையில் பரப்பப்படுகிறது என்பதை அவர்கள் சரி பார்க்க வேண்டும். இதுபோன்ற செய்திகள் உண்மையல்ல என்று நினைக்கிறேன்" என்றார்.
இந்த திட்டத்தின் கீழ், ப்ளூ டிக் பயனர்கள் 90 நாட்களுக்குள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். இல்லையேல், அவர்களின் நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை இழக்க நேரிடும். திட்டத்தில் பணிபுரியும் ட்விட்டர் பணியாளர்கள் இந்த அம்சத்தைத் தொடங்க நவம்பர் 7 ஆம் தேதிக்குள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை கடந்த வியாழக்கிழமை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். ட்விட்டர் சிஇஓ பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்கு பேரை ட்விட்டரில் இருந்து நீக்கினார்.