துருக்கியில் நேற்று மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. இந்த மோசமான நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படையின் தேடுதல் வீரர்களையும் மருத்துவர்களையும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நிதி உதவி வழங்கியதற்காக துருக்கி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்தியாவை நண்பர் என குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிரத் சுனெல், ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தோஸ்த் என்பது துருக்கிய மற்றும் இந்தியில் பொதுவான வார்த்தை. நமக்கு ஒரு துருக்கிய பழமொழி உண்டு. "ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்" என்பதுதான் அது. மிக்க நன்றி இந்தியா" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் துருக்கி தூதரகத்திற்கு நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அனுதாபத்தையும் மனிதாபிமான ரீதியாக ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். துருக்கிக்கு ஏற்கனவே, மீட்பு மற்றும் மருத்துவக் குழுக்களை இந்தியா அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF), சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக செல்ல தயாராக உள்ளன.
பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் மருத்துவக் குழுக்கள் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன. துருக்கி அரசு மற்றும் அங்காராவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிவாரண பொருள்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர், பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.