உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாராவில் கட்டுமான சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்றுடன் (நவம்பர் 26) 15வது நாளை எட்டியுள்ளது. சுரங்கத்தை போட வேண்டிய 80 செ.மீ., விட்டம் கொண்ட கடைசி 10 மீட்டர் குழாய் பதிக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெறும் நிலையில், துளையிடும் இயந்திரம் பலமுறை பிரச்னைகளை சந்தித்து வருகிறது.  


இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாளை(திங்கட்கிழமை)  முதல் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்றும், இதன் காரணமாக மீட்புப் பணி மேலும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. மீட்புப் பணியில் இதுவரை என்ன நடந்தது மற்றும் தொழிலாளர்களை வெளியேற்றுவதில் இன்னும் என்னென்ன சவால்கள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். 


1. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க பயன்படுத்தப்படும் ஆஜர் இயந்திரத்தின் பிளேடு அடிக்கடி உடைந்துவிடுகிறது. இதன்காரணமாக தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இதற்கிடையில், நேற்று சுரங்கப்பாதையை ஆய்வு செய்த சர்வதேச வல்லுநர்கள், அடுத்த மாதம் கிறிஸ்துமஸுக்குள் தொழிலாளர்கள் வெளியே கொண்டு வர படுவார்கள் என்று தெரிவித்தனர்.  சுரங்கத்தை தோண்டும் பணி நேற்று முன் தினம் முழுவதும் தடைபட்டது. 


2. பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தர்காஷி, ருத்ரபிரயாக், சாமோலி, பித்தோராகர் மற்றும் அல்மோரா ஆகிய பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், சுரங்கப்பாதையின் உள்ளே சொருகப்பட்ட குழாய் தாங்கும் கம்பிகளின் நிலைமை மோசமாகலாம். இதனால், மீட்புப் பணியில் ஈடுபடும் மீட்பு பணியாளர்களின் பாதுகாப்பு பெரும் சவாலாக இருக்கும். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டால், மீட்புப் பணி கடுமையாக பாதிக்கப்படும். தொடர்ந்து,  பனிப்பொழிவின்போது மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், குளிர் நாளுக்குநாள் அதிகரித்தால் சுரங்கப்பாதையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். 



3. மீட்புப் பணியின் 14வது நாளான நேற்று மீட்பு பணியின் மேற்பார்வையாளர்கள் புதிய திட்டத்தினை வகுத்துள்ளனர். அதன்படி, மீதமுள்ள 10 அல்லது 12 மீட்டர் பாதையை கைகளால் துளையிடுவது அல்லது மேலிருந்து 86 மீட்டர் கீழே துளையிடுதல் என்று திட்டமிட்டுள்ள்னர். இதற்கிடையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்டிஎம்ஏ) உறுப்பினர் மற்றும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழிலாளர்கள் மீட்க இன்னும் சில காலம் எடுக்கலாம் என்று தெரிவித்தார். 


4. சுரங்கப்பாதையின் இடிந்து விழுந்த பகுதியின் நீளம் சுமார் 60 மீட்டர். பிளேட்டின் சுமார் 20 பாகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை முடிக்க ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் விமானம் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இது நடந்தால் கைகளால் துளையிடும் பணி தொடங்கப்பட்டு அடுத்த 24-36 மணிநேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படலாம் என்றும் தெரிவித்தார். 


6. கட்டுமானப் பணியின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை பிரதமர் நரேந்திர மோடி தினமும் கேட்டு வருகிறார். ஆஜர் இயந்திரத்தால் பணி பாதிக்கப்பட்டதால் சிக்கிய தொழிலாளர்களின் குடும்பத்தினரின் கவலை அதிகரித்து வருகிறது. பேரிடர் நடந்த பகுதிக்கு அருகில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் அடிக்கடி தொழிலாளர்களுடன் பேசி வருகின்றனர். 


7.  ஆறு அங்குல அகல குழாய்கள் மூலம் உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் தொழிலாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. குழாய்களைப் பயன்படுத்தி ஒரு தகவல் தொடர்பு அமைப்பு நிறுவப்பட்டதன்மூலம், என்.டி.ஆர்.எப்., டாக்டர்கள் குழுவினர், தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர்.


8. இந்த குழாய் வழியாக ஒரு எண்டோஸ்கோபிக் கேமராவும் சுரங்கப்பாதையில் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீட்புப் பணியாளர்கள் உள்ளே இருக்கும் நிலைமையை தெரிந்துகொள்ள முடியும். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தாலும், விரையில் மீட்கப்படாததால் அவர்களின் மன உறுதி நாளுக்குநாள் உடைந்து வருகிறது.


9. சார்தாம் யாத்ரா வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி தீபாவளி தினமான நவம்பர் 12ஆம் தேதி இடிந்து விழுந்ததால் அதில் பணிபுரிந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அதையடுத்து, அவர்களை மீட்க பல்வேறு அமைப்புகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை ஒரு தொழிலாளி கூட மீட்கப்படவில்லை.


10. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க மீட்பு முகவர்கள் லுடோ மற்றும் சீட்டாட்டம் போன்றவற்றை உள்ளே அனுப்பியுள்ளனர். இவற்றுடன் விளையாடுவதன் மூலம் தொழிலாளர்கள் சற்று ஓய்வெடுக்க முடிகிறது. இந்தத் தொழிலாளர்கள் வெளியே வந்ததும், 41 படுக்கைகள் ஒதுக்கப்பட்ட அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மீட்புப் பணியில் ஏற்கனவே 41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அம்மாநில முதல்வர் தாமி இங்கு தற்காலிக முகாம் அமைத்து மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.